Home One Line P1 செல்லியல் பார்வை: வெவோனா – மரக்கிளை மேலிருந்து புகழ் ஏணியின் உச்சிக்கு…

செல்லியல் பார்வை: வெவோனா – மரக்கிளை மேலிருந்து புகழ் ஏணியின் உச்சிக்கு…

761
0
SHARE
Ad

(21 செப்டம்பர் 2020 ஆம் நாள் செல்லியல் பார்வை காணொலி தளத்தில் இடம் பெற்ற சபா மாணவி வெவோனா மொசிபின் குறித்த காணொலிப் பதிவின் கட்டுரை வடிவம்)

சபாவின் ஒரு சாதாரண கிராமப் புற மாணவி வெவோனா மொசிபின் நாடு தழுவிய அளவில் பேசுபொருளாக இன்று மாறியிருக்கிறார்.

வெவோனா மொசிபின்!

இன்றைக்கு சபாவில் மட்டுமின்றி, நாடு தழுவிய அளவில் மக்களால் கொண்டாடப்படும் கதாநாயகியாக மாறியிருப்பவர்.

#TamilSchoolmychoice

பதினெட்டே வயது நிரம்பிய மாணவி. சபா மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவில் உள்ள யுனிவர்சிடி மலேசியா சபா பல்கலைக் கழகத்தின் அறிவியல் துறையில் கல்வி கற்று வருகிறார்.

கோத்தா கினபாலுவில் இருந்து சுமார் 137 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பித்தாஸ் என்ற வட்டாரத்தைச் சேர்ந்த கம்போங் சபத்தாலாங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்  வெவோனா.

சில நாட்களிலேயே நாடு முழுக்கப் பேசப்படும் அளவுக்கு – ஏன் உலக அளவிலும் விவாதிக்கப்படும் அளவுக்கு விரிவடைந்த வெவோனாவின் விவகாரம்  உருவானது எப்படி என்பது சுவாரசியமும், திருப்பங்களும் பிணைந்த ஒரு கதை.

கொவிட்-19 பாதிப்புகளால் நாடு முழுவதும் முடங்கிக் கிடந்த நிலையில் யுனிவர்சிடி மலேசியா சபா தனது மாணவர்களுக்கு இயங்கலை வழியான – அதாவது ஒன்லைன் எனப்படும் இணையம் வழியான – தேர்வுகளை அறிவித்தது.

இணையத் தொடர்புக்காக மரக்கிளையின் மேல்…

இணைய வழி தேர்வுகள் நடத்தப்பட்ட போது தனது இல்லத்தில் இணைய இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டார் வெவோனா.

தனது இல்லத்தில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்று ஒரு மரத்தில் ஏறி, மரக்கிளையின் மேல் அமர்ந்து கொண்டு இணைய இணைப்பைப் பெற்றதாக அவர் காணொலி வழியாகப் பதிவிட்டார்.

தேர்வுகளை இணையம் வழி எழுத, தான் 24 மணி நேரம் அந்த மரக்கிளையின் மேல் அமர்ந்து செலவிட்டதாகவும் வெவோனா அந்தக் காணொலியில் தெரிவித்தார்.

பூச்சிக் கடிகளில் இருந்தும், பறக்கும் வண்டுகளின் தாக்குதலையும் சமாளிக்கவும் தன்னைச்சுற்றி வலைவிரித்துக் கொண்டு அவர் அமர்ந்திருந்த காட்சியும் காணொலியில் பதிவானது.

ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது இந்தக் காணொலி.

நாடு முழுவதும் அந்தப் பதிவு பொதுமக்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. சபா அரசியல்வாதிகளும், எதிர்கட்சி அரசியல்வாதிகளும் சபாவின் இணைய இணைப்பு நிலைமையை எடுத்துக் காட்ட அந்தக் காணொலியை உதாரணமாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இணைய இணைப்பு கிடைக்காத பகுதிகளில் பின்தங்கிய மாணவர்கள் படும் சிரமங்களை ஒரே சமூக ஊடகப் பதிவு காணொலியின் மூலம் அனைத்துத் தரப்புகளுக்கும் உணர்த்தி விட்டார் வெவோனா.

யூடியூப் தளத்தில் இதுவரையில் சுமார் 800,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது அவரது காணொலி.

அனைத்துலக அளவில் ஊடகங்களிலும் பிரபலமானது கல்விக்கான, இணையத் தொடர்புக்கான அவரது போராட்டக்கதை.

அவரது காணொலிப் பதிவு பிரபலமான பின்னர் மலேசிய பல்ஊடக தொடர்புத் துறை ஆணையம், வெவோனா கிராம வட்டாரத்தில் இணையத் தொடர்பை வலுப்படுத்த தொலைத் தொடர்பு கோபுரங்கள் நிர்மாணிக்கப்படும் என அறிவித்தது.

யுனிவர்சிடி மலேசியா சபா ஜூன் மாத இறுதியில் வெவோனாவுக்கு முழு உபகாரச்சம்பளத்தை வழங்கி, கல்விக் கட்டணமின்றி அவர் தனது கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கியது (படம்).

சரி! விவகாரம் இத்துடன் முடிந்தது என அனைவரும் நினைத்திருந்தனர்.

வெவோனாவைப் பிரபலமாக்கிய துணையமைச்சர்

ஆனால் அதன்பிறகுதான் பிரச்சனை இன்னொரு கோணத்தில் வெடித்து வெவோனா முன்பைவிடப் பிரபலமானார்.

செப்டம்பர் 3-ஆம் தேதி நாடாளுமன்ற மேலவையில் வெவோனா விவகாரம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பல்ஊடக, தொடர்புத் துறை துணையமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் (படம்) ஒரு சாதாரண மாணவியான வெவோனாவை ஏதோ எதிரி போல் கருதி, பிரச்சனைக்கான பதில்களை வழங்காமல் எதிர்த்தாக்குதல் கருத்துகளால் காயப்படுத்தினார்.

சாஹிடி அம்னோவைச் சேர்ந்தவர். பெர்லிஸ் பாடாங் பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட!

வெவோனா ஒரு சாதாரண யூடியூப் பயனர், அவர் தேர்வு எதையும் எழுதவில்லை, வெறும் பிரபல்யத்துக்காக தனது காணொலிப் பதிவை பதிவிட்டார் என்றெல்லாம் அடுக்கடுக்காக குற்றம் சுமத்தினார் துணையமைச்சர்.

அதன் காரணமாக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. வெவோனாவுக்கு ஆதரவாக மக்களின் குரல்கள் ஒருங்கிணைந்தன.

பல அரசியல்வாதிகளும் வெவோனாவைத் தற்காத்தனர்.

பிரச்சனைக்கான பதிலை வழங்காது ஒரு சாதாரண கிராமப்புற மாணவி மீது தனிநபர் தாக்குதல் நடத்திய துணையமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல்கள் எழுந்தன.

வெவோனாவும் துணிந்து துணையமைச்சருக்கு பதிலடி கொடுத்தார். தான் தேர்வு எழுதியதற்கான ஆதாரங்களையும் எடுத்து வைத்தார். ஜூன் 9 முதல் ஜூன் 12 வரை வெவோனா இணையம் வழியான தேர்வுகளை எழுதினார் என்ற ஆதாரத்தை பல்கலைக் கழக நிர்வாகமும் உறுதிப்படுத்தியது.

மாணவியிடம் மன்னிப்பு கேட்ட துணையமைச்சர்

குடாட் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹிம் பாக்ரி

அன்று மாலையே தனது முகநூல் பக்கத்தில் வெவோனாவிடம் மன்னிப்பு கோரி பதிவிட்டார் துணையமைச்சர் சாஹிடி. வெவோனாவின் தகவல் தவறானது என்பதைத் தன்னிடம் சுட்டிக் காட்டியது சபா, குடாட் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹிம் பாக்ரி என்றார் சாஹிடி. அந்த அடிப்படையில்தான் தான் வெவோனாவுக்கு எதிராக அவ்வாறு கூற நேர்ந்தது என்றும் சாஹிடி கூறினார்.

குடாட் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அந்தத் தவறானத் தகவலைத் தந்தது பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார் துணையமைச்சர் சாஹிடி.

குடாட் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் ரஹிம் பாக்ரி துணை நிதி அமைச்சருமாவார். பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவர்.

தவறானத் தகவல்களை வழங்கிய துணையமைச்சரான அப்துல் ரஹிம் பாக்ரிக்கு எதிராகவும் நாடு முழுக்க கண்டனங்கள் எழுந்தன.

தொடர்ந்து அடுத்த நாள் நாடாளுமன்ற மேலவையின் கூட்டத் தொடரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பல்ஊடக, தொடர்புத் துறை துணையமைச்சர் சாஹிடி.

சாஹிடி இழைத்த தவறுக்காகத் தானும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சைபுடின் அப்துல்லாவும் அறிக்கை விட்டார்.

வெவோனாவுக்கு ஆதரவாக நாடளாவிய அளவில் எழுகின்ற குரல்கள் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்களாகவும் உருமாறுகின்றன என்பதைப் புரிந்து கொண்டது மத்திய அரசாங்கத்தை ஆளும் தேசியக் கூட்டணி அரசாங்கம்.

இரண்டு துணையமைச்சர்களால் ஏற்பட்ட அரசியல் சேதங்களை சரிசெய்ய அரசாங்கம் முற்பட்டது.

வெவோனாவைச் சந்தித்த கைரி ஜமாலுடின்,பிரதமர் மொகிதின் யாசின்

வெவோனா எழுப்பிய பிரச்சனைகளின் உண்மையான அம்சங்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துக் கொண்டது என அறிவித்தார் அறிவியல் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின்.

மோசமான இணைய இணைப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பிற அடிப்படை உள்கட்டமைப்புகள் குறித்து வெவோனா எழுப்பியுள்ள பிரச்சனைகளை ஆராய அமைச்சரவை ஒப்புக் கொண்டதாகவும் அவர் அறிவித்தார்.

அதோடு நின்றுவிடாமல், கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) வெவோனாவை யுனிவர்சிடி மலேசியா சபா வளாகத்தில் நேரடியாகச் சந்தித்து அமைச்சரவையின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் கைரி.

இதற்கிடையில் சபா சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல்களில் கலந்து கொள்வதற்காக சபா வந்தார் பிரதமர் மொகிதின் யாசின்.

தனது நெருக்கடியான அரசியல் அலுவல்களுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி வெவோனாவையும் அவரது குடும்பத்தனரையும் சந்தித்து அவர்களுக்கு இரவு உணவு வழங்கி உபசரித்திருக்கிறார் மொகிதின் யாசின்.

“மலேசியாவின் 8-வது பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் என்னையும் என் குடும்பத்தினரையும் அழைத்து இரவு விருந்துபசரிப்பு வழங்கி கௌரவித்திருக்கிறார். அவர் அற்புதமான மனிதர். மிகவும் பணிவாக நடந்து கொண்டார். மிகவும் நன்றி டான்ஸ்ரீ” எனப் பதிவிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் வெவோனா.

இவ்வாறாக வெவோனா இன்றைக்கு நாடு தழுவிய நிலையிலும், குறிப்பாக சபா அரசியல் களத்திலும் பேசுபொருளாகியிருக்கிறார்.

எதிர்வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தல்களில்கூட சபா மக்களின் முகமாகவும், பிரச்சார மேடைகளில் விவாதப் பொருளாகவும்  மாறியிருக்கிறார் வெவோனா.

-இரா.முத்தரசன்

வெவோனா மொசிபின் குறித்த செல்லியல் பார்வை காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: