கோலாலம்பூர்: சபா பல்கலைக்கழக மாணவர் வெவோனா மொசிபினுக்கு எதிராக இரண்டு துணை அமைச்சர்கள் கூறிய அவமானகரமான, நியாயமற்ற கருத்துக்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று கூறினார்.
மோசமான இணைய இணைப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பிற அடிப்படை உள்கட்டமைப்புகள் குறித்து வெவோனா எழுப்பியுள்ள பிரச்சனைகளை ஆராய அமைச்சரவை ஒப்புக் கொண்டதாகவும் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அறிவித்தார்.
“இன்று காலை அமைச்சரவை வெவோனா பிரச்சனை பற்றி விவாதித்தது. இரண்டு துணை அமைச்சர்கள் வெளியிட்ட அவமதிப்பு, நியாயமற்ற அறிக்கைகளை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளது.
“உண்மையான பிரச்சனை இணைய இணைப்பு மற்றும் கிராமப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு என்று அமைச்சரவை ஒப்புக்கொண்டது. அதை சரிசெய்ய அரசாங்கம் முடிந்தவரை முயற்சிக்கும், ” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தனது கருத்துக்களுக்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் டத்தோ சாஹிடி ஜைனுல் அபிடின் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். வேவொனா கவனத்தை ஈர்ப்பவர் என்று அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
ஜூன் மாதத்தில் இயங்கலையில் எந்தவொரு தேர்வும் நடத்தப்படவில்லை என்று தனது விசாரணையில் துணை நிதி அமைச்சர் அப்துல் ராகிம் தொடர்ந்து தற்காத்துப் பேசினார். மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளரை தனது ஆதாரமாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று, சபாவின் முன்னாள் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும், சபா பல்கலைகழக (யுஎம்எஸ்) தலைவருமான டத்தோஸ்ரீ மாசிடி மஞ்சுன், ஜூன் மாதத்தில் வெவோனா பரீட்சைகளுக்கு அமர்ந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.
ஜூன் மாதத்தில், வெவோனா தனது யூடியூப் அலைவரிசையில் ஒரு மரத்தின் மீது 24 மணிநேரம் எவ்வாறு செலவிட்டார் என்பதைக் காண்பிக்கும் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.