Home One Line P1 வெவோனா குடும்பத்தினருக்கு விருந்துபசரிப்பு வழங்கிய பிரதமர்

வெவோனா குடும்பத்தினருக்கு விருந்துபசரிப்பு வழங்கிய பிரதமர்

128
0
SHARE

கோத்தாகினபாலு : ஒரே காணொலியின் மூலம் மலேசியா முழுவதும் பிரபலமாகிவிட்ட சபா மாணவி வெவோனா மொசிபின். அவரையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்து இரவு விருந்துபசரிப்பு வழங்கி கௌரவித்திருக்கிறார் பிரதமர் மொகிதின் யாசின்.

இந்தத் தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் வெவோனா. அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடினுடனான புகைப்படத்தையும் வெவோனா பகிர்ந்திருக்கிறார்.

“மலேசியாவின் 8-வது பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் என்னையும் என் குடும்பத்தினரையும் அழைத்து இரவு விருந்துபசரிப்பு வழங்கி கௌரவித்திருக்கிறார். அவர் அற்புதமான மனிதர். மிகவும் பணிவாக நடந்து கொண்டார். மிகவும் நன்றி டான்ஸ்ரீ” எனப் பதிவிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் வெவோனா.

சபாவில் சில இடங்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருக்கிறது என்பதை ஒரே சமூக ஊடகப் பதிவு காணொலியின் மூலம் உணர்த்தியவர் வெவோனா. யுனிவர்சிடி மலேசியா சபா பல்கலைக் கழகத்தின் மாணவி.

யூடியூப் தளத்தில் இதுவரையில் சுமார் 800,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது அவரது காணொலி.

இணைய வழி தேர்வுகள் நடத்தப்பட்ட போது இணைய இணைப்பு கிடைக்காமல் தான் ஒரு மரத்தில் ஏறி, மரக்கிளையின் மேல் அமர்ந்து கொண்டு இணைய இணைப்பைப் பெற்றதாக அவர் பதிவிட்டார்.

நாடு முழுவதும் அந்தப் பதிவு பொதுமக்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மாணவர்களின் பிரச்சனையை எடுத்துக் காட்டியது. இணைய இணைப்பு கிடைக்காத பகுதிகளில் மாணவர்கள் படும் சிரமங்களையும் புலப்படுத்தியது.

ஆனால், தொடர்புத் துறை துணையமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் ஒரு சாதாரண மாணவியான வெவோனாவை ஏதோ எதிரி போல் கருதி, பிரச்சனைக்கான பதில்களை வழங்காமல் எதிர்த்தாக்குதல் கருத்துகளால் காயப்படுத்தினார். அதன் காரணமாக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. வெவோனாவுக்கு ஆதரவாக மக்களின் குரல்கள் ஒருங்கிணைந்தன.

மற்றொரு துணையமைச்சரான அப்துல் ரஹிம் பாக்ரியும் வெவோனாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டார். அவருக்கும் கண்டனங்கள் எழுந்தன.

வெவோனாவுக்கு ஆதரவாக எழுகின்ற குரல்கள் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்களாகவும் உருமாறுகின்றன என்பதைப் புரிந்து கொண்டது தேசியக் கூட்டணி அரசாங்கம். வெவோனா எழுப்பிய பிரச்சனைகளின் உண்மையான அம்சங்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துக் கொண்டது என அறிவித்தார் அமைச்சர் கைரி ஜமாலுடின்.

மோசமான இணைய இணைப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பிற அடிப்படை உள்கட்டமைப்புகள் குறித்து வெவோனா எழுப்பியுள்ள பிரச்சனைகளை ஆராய அமைச்சரவை ஒப்புக் கொண்டதாகவும் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அறிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) வெவோனாவை யுனிவர்சிடி மலேசியா சபா வளாகத்தில் நேரடியாகச் சந்தித்து அமைச்சரவையின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் கைரி.

இதைத்தொடந்து தொடர்பு பல்ஊடக துணையமைச்சர் சாஹிடியும் நாடாளுமன்ற மேலவையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 12) நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல்களில் கலந்து கொள்வதற்காக சபா வந்தார் பிரதமர் மொகிதின் யாசின்.

தனது நெருக்கடியான அரசியல் அலுவல்களுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி வெவோனாவையும் அவரது குடும்பத்தனரையும் சந்தித்து அவர்களுக்கு இரவு உணவு வழங்கி உபசரித்திருக்கிறார் மொகிதின் யாசின்.

இதன் மூலம் வெவோனா இன்றைக்கு நாடு தழுவிய நிலையிலும், குறிப்பாக சபா அரசியல் களத்திலும் பேசுபொருளாகியிருக்கிறார்.

சபாவை, சபா மாநில மக்களே ஆள வேண்டும், ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ண ஓட்டங்கள் சபா மாநிலம் முழுவதும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, சபா தேர்தல் பிரச்சாரங்களில் இந்த அம்சமே முதன்மையாக எதிரொலிக்கின்றது.

சபா மக்களின் குரல்கள் மத்திய அரசாங்கத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றன, சபா மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பது போன்ற எதிர்ப்புக் குரல்களைப் பிரதிபலிக்க வெவோனாவின் சம்பவங்கள் உதாரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

 

Comments