கோலாலம்பூர்: மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 763 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்ததாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
அவர்களில் 746 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 608 பேர் மதுபானம் மற்றும் இரவு விடுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய 12 நபர்களும் அடங்குவர்.
மற்றவர்கள் கூடல் இடைவெளியை அனுசரிக்காதது, நுழைந்தவுடன் வாடிக்கையாளர்களை பதிவு செய்யாதது, முகக்கவசங்கள் அணியாதது, வணிக நேரங்களுக்கு அப்பால் தங்கள் தொழில்களை நடத்தியது, சேவல் சண்டை சூதாட்டத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக குடியேறிய 71 பேரையும், நான்கு கடத்தல்காரர்களையும் காவல் துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் கைது செய்துள்ளனர் என்றும் இஸ்மாயில் கூறினார்.