புத்ராஜெயா: நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் கவனித்து வருகிறது.
சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974- இன் கீழ் வழங்கப்படும் அபராதம் போதுமானதாக இல்லை என்று அது கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் குற்றம் மற்றும் தடுப்புப் பிரிவை (environmental crime and prevention unit (UCJAS) ஆரம்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் அமைச்சர் துவான் இப்ராகிம் துவான் மான், இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
மாசுபடுத்தப்பட்ட நீர்வளங்களை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் பொறுப்பேற்க வேண்டும். சுத்தம் செய்வதற்கான செலவை ஏற்கும் கடுமையான அபராதம் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திற்கு இடையிலான சந்திப்பின் பின்னர் நிறுவப்பட்ட சுற்றுச்சூழல் குற்றம் மற்றும் தடுப்புப் பிரிவு , அடுத்த மாதம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக செயல்பட காவல் துறைக்கு அதிகாரம் வழங்க அமைச்சுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
“சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 மற்றும் நீர் சேவைகள் தொழில் சட்டம் 2006 ஆகியவற்றின் அதிகாரங்கள் காவல் துறையினருக்கு வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.
“இதுவரை, உயிர்பாதுகாப்பு சட்டம் 2007- இன் அதிகாரங்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.” என்று அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஆற்று நீரில் ஏற்பட்ட மாசு காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூர் மக்கள் 5 நாட்களுக்கு நீர் விநியோகத் தடையை எதிர்கொண்டனர்.
இதனிடையே, சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
50 முதல் 60 வயதுவரையிலான அந்த நால்வரும் வியாழக்கிழமை வரை தடுப்புக் காவலில் விசாரிக்கப்படுவர். அந்த நால்வரும் சகோதரர்களாவர்.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அசுத்தமான எண்ணெய்க் கழிவுகளால் நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் தங்களின் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சேவைகளை வியாழக்கிழமை (செப்டம்பர் 3) முதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதன் காரணமாக, சிலாங்கூரின் 1,292 பகுதிகளில் உள்ள சுமார் 1.2 மில்லியன் இல்லங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டது.