கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், சரவாக்கில் உள்ள 369 பள்ளிகளுக்கு சூரிய சக்தி திட்டத்தைப் பெற உதவுவதற்கு பரிசாக ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் ஒருபோதும் தமக்காகப் பணம் கேட்கவில்லை என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
வழக்கறிஞர் ஜக்ஜித் சிங்கின் குறுக்கு விசாரணையின் போது இந்த விஷயத்தை அவரது முன்னாள் உதவியாளர் ரிசால் மன்சோர் கூறினார்.
ரோஸ்மா, 187.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாகவும், ஜெபாக் ஹோல்டிங்ஸின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சைடி அபாங் ஷாம்சுடினிடமிருந்து 6.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாகவும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூரிய சக்தி திட்டத்திலிருந்து 187.5 மில்லியன் ரிங்கிட்டை ரோஸ்மா மன்சோர் பங்குக் கேட்டதாக ஜெபாக் ஹோல்டிங்சின் நிர்வாக இயக்குனர் சைடி அபாங் சம்சுடினின் வணிக நண்பர் ரேயன் ராட்ஸ்வில் அப்துல்லா அண்மையில் தெரிவித்திருந்தார்.