Home One Line P1 187.5 மில்லியன் ரிங்கிட் பங்குக் கேட்ட ரோஸ்மா!

187.5 மில்லியன் ரிங்கிட் பங்குக் கேட்ட ரோஸ்மா!

809
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டத்தின் ரோஸ்மா மன்சோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. சரவாக் பள்ளிகளுக்கான சூரிய சக்தி திட்டத்திலிருந்து 187.5 மில்லியன் ரிங்கிட்டை ரோஸ்மா மன்சோர் பங்குக் கேட்டதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜெபாக் ஹோல்டிங்சின் நிர்வாக இயக்குனர் சைடி அபாங் சம்சுடினின் வணிக நண்பர் ரேயன் ராட்ஸ்வில் அப்துல்லா இந்த வழக்கில் இன்று சாட்சியமளித்தார். 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூரிய சக்தி திட்டத்திலிருந்து 187.5 மில்லியன் ரிங்கிட்டை ரோஸ்மா மன்சோர் பங்குக் கேட்டதாக அவர் தெரிவித்தார்.

40 வயதான ரேயன் ராட்ஸ்வில் அப்துல்லா, நானோகார்ப் டெக்னாலஜி செண்டெரியான் பெர்ஹாட் இயக்குநராவார்.

#TamilSchoolmychoice

ரோஸ்மா பங்கு கேட்ட விஷயத்தை அவருக்கு ரோஸ்மாவின் உதவியாளராக இருந்த டத்தோ ரிசால் மன்சோர் தெரிவித்ததாகக் கூறினார். ஜனவரி மற்றும் பிப்ரவரி 2016- க்கு இடையில் சன்வே புத்ரா பேரங்காடியில் தன்னை ரிசால் மன்சோர் சந்தித்து இதனைத் தெரிவித்ததாகக் கூறினார்.

“டத்தோ ரிசால் என்னையும் சைடியையும் உணவகத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது, ​​டத்தோ ரிசால், ரோஸ்மாவுக்கான பங்களிப்பின் அளவைத் தவிர, எல்லாவற்றையும் சரி என்று கூறினார்.

“சைடி, இந்த மதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அவர் (சைடி) பலரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் அதை சிறிது குறைக்க வேண்டும் என்றும் கூறினார். அதைப் பார்த்துவிட்டு மீண்டும் சைடிக்குச் சொல்வேன் என்று டத்தோ ரிசால் கூறினார். அவர் (டத்தோ ரிசால்) சைடியிடமிருந்து ஐந்து வருடங்களுக்கு ஆண்டுக்கு 5 மில்லியன் டாலர் பங்கைக் கேட்டார். அதற்கு சைடி சரி என்று கூறினார், ” என்று அவர் மேலும் கூறினார்.

16 -வது அரசு தரப்பு சாட்சியான ரேயன் ராட்ஸ்வில், சந்திப்பிற்குப் பிறகு ரிசால் மீண்டும் தம்மைத் தொடர்பு கொண்டு, 15 விழுக்காடு தொகை இறுதியானது என்று சொல்லி, அதைப் பற்றி சைடிக்கு தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்.

சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தித் திட்டத்தினை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் 1.25 பில்லியன் ரிங்கிட் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் குத்தகையைப் பெற்றுத் தருவதற்காக, ரோஸ்மா ஜெபாக் ஹோல்டிங்ஸிடமிருந்து மூன்று முறை இலஞ்சம் கோரி, பெற முயற்சித்ததாக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.