கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இப்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தரவுத்தளத்தில் (https://www.sprm.gov.my/en/enforcement/corruption-offenders-database), உள்நாட்டில் தண்டனை பெற்ற ஊழல் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார்.
முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் அவரது தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.
நஜிப்பின் பெயர் தற்போது எம்ஏசிசி ஊழல் குற்றவாளிகள் தரவுத்தளத்தின் முதல் பக்கத்தின் மேல் பகுதியில் உள்ளது.
தரவுத்தளத்தில், முன்னாள் பிரதமர் நஜிப் “அரசு ஊழியர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருக்கு முந்தைய குற்றச்சாட்டுகள் இல்லை என்றும், அவரது வழக்கு மேல்முறையீடு செய்யப்படுவதைக் குறிப்பிட்டு “மேல்முறையீடு நிலுவையில் உள்ளது” என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அவரது பெயர் தரவுத்தளத்தில் எப்போது சேர்க்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஊழல் குற்றவாளிகளின் தரவுத்தளம், ஊழல் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்களின் தகவல்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என்பதால் ஊழலைச் செய்வதிலிருந்து பொதுமக்களைத் தடுக்கும் நோக்கத்தை இது கொண்டுள்ளதாக எம்ஏசிசி வலைத்தளம் கூறியுள்ளது.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனலின் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்புடைய நம்பிக்கை மோசடி , அதிகார அத்துமீறல், பணமோசடி ஆகிய குற்றங்களை உள்ளடக்கிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கும் ஜூலை 28 அன்று உயர் நீதிமன்றம் நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
நஜீப்பிற்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் நீதிமன்றம் விதித்தது.