Home One Line P1 கெத்தாபியின் கூற்றுக்கு ஷாபி அப்டால் மன்னிப்பு

கெத்தாபியின் கூற்றுக்கு ஷாபி அப்டால் மன்னிப்பு

542
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தற்காப்புப் படையின் அனைத்து உறுப்பினர்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமது கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரான டத்தோ முகமடின் கெத்தாபி, 2013-ஆம் ஆண்டு நடந்த தண்டுவோ பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறித்து தற்காப்புப் பணியாளர்களைக் குறைத்து மதிப்பிட்டதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“வாரிசான் தலைவர், முதலமைச்சர் என்ற முறையில், கட்சி உறுப்பினரின் அறிக்கை குறித்து தற்காப்புப் படையினர், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அனைத்து மலேசியர்களிடமும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்,” என்று அவர் செவ்வாயன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

செகாமா வேட்பாளரான முகமட் கெத்தாபியின் தன்னிச்சையான கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன, மேலும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த தற்காப்புப் படையினரைக் குறைத்து மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று ஷாபி கூறினார்.

” முன்னாள் துணை தற்காப்பு அமைச்சர் என்ற வகையில், நாட்டைப் பாதுகாப்பதில் நமது தற்காப்புப் படையினர் செய்த தியாகங்களை நான் முழுமையாக அறிவேன். அவர்களில் பலர் தொலைதூர மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட புறக்காவல் மையங்களில் குறைந்தபட்ச வசதிகளுடன் வைக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

“இதுபோன்ற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள நமது தற்காப்புப் படையினர் ஒவ்வொருவரும் மலேசியாவை பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர், ஆனால் இந்த தொலைதூர இடங்களுக்கு அனுப்பும் போது அவர்களது குடும்பத்தினரிடமிருந்து விலகி இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கொவிட்19 பரவலை தடுக்க உதவும் முன்னணிப் பணியாளர்களாக தற்காப்புப் படையினரின் பங்கை அவர் புரிந்து கொண்டார் என்றும் ஷாபி கூறினார்.

செகாமா வேட்பாளர் முகமடின், 90 விநாடி காணொலியில், 2013 தண்டுவோ ஊடுருவலை குறைத்துப் பேசியப் பிறகு மன்னிப்பு கோரினார். ஆயினும், அது வாரிசானின் பெரும் பின்னடைவாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய முன்னணி, கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்த ஒரு காணொலிப் பதிவை வைத்து தற்போது அவர்களின் பிரச்சாரங்களில் முதன்மை கருத்தாகப் பேசி வருகின்றனர்.

2013- ஆம் ஆண்டு சுலு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு சண்டை, 13- வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற தேசிய முன்னணிக்கு உதவுவதற்கான ஒரு நாடகம் என்று முகமடின் கெத்தாபி கூறியிருந்தார். அது பலரது கண்டனத்திற்கு ஆளானது.

அவர் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், வாரிசான் தேர்தலில் தோல்வியடைவதைக் காண விரும்புபவர்களால் பரப்பப்பட்டதாகவும் முகமடின் கூறினார்.