புது டில்லி: கொவிட்19 தொற்றுக் காரணமாக இந்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சுரேஷ் , கொவிட்19 நோய்த்தொற்று காரணமாக மரணமுற்ற முதல் மத்திய அமைச்சரும், நான்காவது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
1955- இல் பிறந்த கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான சுரேஷ், தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் கட்சியில் பல பதவிகளை வகித்துள்ளார். 1996- இல் பெல்காமில் பாஜக துணைத் தலைவராகத் தொடங்கினார்.
2004-இல் மக்களவைத் தேர்தலிலும், 2009-ல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-இல் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தபோது அவர் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது மரணம் குறித்து, அதிபர் ராம் நாத் கோவிந்த், “மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் அங்காடி காலமானதை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். நேசமான தலைவர் ஸ்ரீ அங்காடி. தனது தொகுதியான பெலகாவி மற்றும் கர்நாடக மக்களுக்காக அயராது உழைத்தார்.” என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
“ஸ்ரீ சுரேஷ் அங்காடி ஒரு விதிவிலக்கான காரியகார்த்தா ஆவார். அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தார். ஓர் அர்ப்பணிப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திறமையான அமைச்சராக இருந்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. ” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக இந்தியா தினசரி 70,000 வரை கொவிட்19 சம்பவங்களைப் பதிவு செய்து வருகிறது.