கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அரண்மனையில் பிரதமராக பதவி உறுதிமொழி எடுப்பார் என்ற புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. இந்த படத்தில் பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி சின்னம் இடம்பெற்றுள்ளது.
இது போலியான படம் என்று இளைஞர் அணி கூறியுள்ளது. அப்படத்தில் கட்சித் தலைவரும், இளைஞர் அணீயின் சின்னமும் இருப்பதாக அதன் செயலாளர் அகமட் சுக்ரி ராசாப் கூறினார்.
“இந்த படத்தில் இருக்கும் தகவல்களும் சின்னங்களும் போலியானவை. அது இளைஞர் அணியின் உண்மையான சின்னம் அல்ல
“பொறுப்பில்லாதவர்கள் இம்மாதிரியான படங்களை சமூகப் பக்கத்தில் உலாவ விட்டிருப்பதால், மக்கள் அதனை பகிர வேண்டாம். அரசியல் மாற்றத்தைக் கெடுக்கும் செயலாக இது பார்க்கப்படுகிறது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று, புதிய ஆட்சியை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மையை தாம் பெற்றுவிட்டதாக அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.
மலாய், இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து இனங்களையும் கொண்ட அரசாங்கத்தை தாம் அமைக்க இருப்பதாக அவர் கூறினார். இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மொகிதின் யாசினின் ஆட்சி கவிழ்ந்ததாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
எனினும் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எண்ணிக்கையை பகிரங்கமாகத் தெரிவிக்க அன்வார் மறுத்து விட்டார்.
மிகக் குறுகியப் பெரும்பான்மையைத் தான் கொண்டிருக்கவில்லை என உறுதிபடத் தெரிவித்தார் அன்வார். எனினும், மாமன்னர் மீது கொண்டிருக்கும் மரியாதை காரணமாக முதலில் அவரிடம் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்டியலைச் சமர்ப்பித்த பின்னரே நான் பகிரங்கமாகத் தெரிவிப்பேன் என்றும் அன்வார் கூறினார்.
“நான் ஐந்து அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. மிக வலுவான, மிக அதிகமானப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறேன்” என்றும் அன்வார் தன்னம்பிகையுடன் கூறினார்.