கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுக்கு ஆளான அம்னோ உச்சமன்றக் குழுத் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்ததால், தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா கோத்தா கினபாலுவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா கினபாலு சுகாதார அலுவலகத்தில் இருந்து நேற்று கண்காணிப்பு உத்தரவைப் பெற்றுள்ளதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெரிவித்தார்.
“இந்த உத்தரவின் மூலம், நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கோத்தா கினபாலுவில் உள்ள ஒரு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் தமது முகநூலில் தெரிவித்தார்.
மூன்று நாட்களுக்கு முன்பு கோலாலம்பூர் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததாகவும், தொற்றுக்கு ஆளாகவில்லை என்றும் அனுவார் கூறினார்.
அவர் கோத்தா கினபாலு சுகாதாரத் துறையில் மற்றொரு பரிசோதனையை மேற்கொண்டதாகவும், அதன் முடிவு விரைவில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“நான் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவேன், வழக்கம் போல் தேர்தல் இயந்திரங்களின் அனைத்து மட்டங்களுடனும் தொடர்புகொள்வேன்,” என்று அவர் கூறினார்.
நாளை சனிக்கிழமை சபா மாநிலத் தேர்தல் நடக்க இருப்பதால், இறுதி நேர பிரச்சாரங்களில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.