Home One Line P1 ‘எனக்கு அதிகாரப் பைத்தியம் இல்லை’- மொகிதின் யாசின்

‘எனக்கு அதிகாரப் பைத்தியம் இல்லை’- மொகிதின் யாசின்

491
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தான் அதிகாரப் பசியில் இல்லை என்றும், அவர் மத்திய அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு செயல்படுவதாகவும் கூறினார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு “வலுவான, உறுதியான ஆதரவு” இருந்ததால் மொகிதினின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புதன்கிழமை கூறினார்.

“அன்வார் சொல்வதைப் போல எனக்கு பெரும்பான்மை இல்லை என்றால், மாமன்னரை சந்திக்கும்படி என்னிடம் கூறப்பட்டிருந்தால், நான் அவருக்கு முதலில் தெரிவிப்பேன். இதுதான் நிலைமை என்றால், நான் எனது இருக்கையை காலி செய்யலாம், ”என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

வேறு வழி இல்லையென்றால், தமது அடுத்த தேர்வாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை மாமன்னரிடம் பரிந்துரைப்பார் என்றும் மொகிதின் கூறினார்.

தனது நடவடிக்கைகள் மத்திய அரசியலமைப்பிற்கு ஏற்ப இருப்பதாக வலியுறுத்தி, அன்வாரின் அறிவிப்பு தாம் கொவிட்19 தொற்றுநோயை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் பணிபுரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் வந்ததாக அவர் கூறினார்.

“அன்வாருக்கு இந்த நிலைமை தெரியாது என்று நான் கூறவில்லை, ஆனால் எனக்கு அதிகாரப் பைத்தியம் இல்லை. என்னால் முடிந்தவரை நாட்டை நிர்வகிப்பதே இப்போது முக்கியம். ” என்று அவர் கூறினார்.

முன்னதாக, அன்வார் இப்ராகிமின் பெரும்பான்மை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மொகிதின் யாசின் அன்றிரவே, சபா புறப்பட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்குக் கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் இன்னும் உங்கள் பிரதமரா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர், அவரது பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை. அவரிடம் பெரும்பான்மை இருப்பதாகவும், எனக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றும் கூறினார். எனவே அவர் பிரதமராக இருக்க உரிமை இருப்பதாக அவர் கருதுகிறார்.

“ஆனால், நான் இன்னும் உங்கள் பிரதமர் என்று உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்று அவர் கூறினார். அவரின் அந்த கூற்றுக்கு அங்கு கூடியிருந்த மக்களிடமிருந்து உரத்த கரவோசை எழும்பியது.

புதன்கிழமை அன்று அன்வார் இப்ராகிமின் அறிவிப்பைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பிரதமர், தனது பெரும்பான்மையை நிரூபிக்காத வரை தாம்தான் நாட்டின் பிரதமர் என்று தெரிவித்தார்.

“இது நிரூபிக்கப்பட வேண்டும். மத்திய அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை மற்றும் முறைகளுக்கு ஏற்ப இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

“இந்த செயல்முறையை தவிர்த்தால், டத்தோஸ்ரீ அன்வாரின் அறிக்கை வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும்

“வேறுவிதமாக நிரூபிக்கப்படும் வரை, தேசிய கூட்டணி அரசாங்கம் இன்னும் உறுதியாக நிற்கிறது. நான் முறையான பிரதமர்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.