கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும், அவர் தனது புதிய கட்சியான பெஜுவாங் மூலம், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவார் என்று கியோடோ நியூஸ்சிடம் கூறியுள்ளார்.
“எனக்கு இன்னும் சிறிது நேரம் வேண்டும், ஆனால் நான் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே சேவை செய்வேன் என்று நினைக்கிறேன்.
“ஆனால், நான் 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்று புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
95 வயதான டாக்டர் மகாதீர், 2018-இல் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் உலகின் மிக வயதான அரசாங்கத் தலைவராக சாதனை படைத்தார்.
1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக நீண்ட காலம் பணியாற்றினார்.
பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தை அவர் இப்போது எதிர்க்கிறார். மொகிதின் ஒரு “துரோகி” என்று அவர் முத்திரை குத்தி உள்ளார்.
புதிய தேசிய கூட்டணி அரசாங்கம் தேசிய முன்னணி நிர்வாகத்தின் பழைய ஊழல் வழிகளை பின்பற்றுவதாக டாக்டர் மகாதீர் நம்புகிறார்.
“துரதிர்ஷ்டவசமாக அது அப்படித்தான். தேசிய கூட்டணி அரசாங்கமாகி மூன்று மாதங்களாக, நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஏனெனில் அவர்களின் செயல்திறனைக் காண விரும்புகிறேன்.
“துரதிர்ஷ்டவசமாக, இது ஊழலாக மாறியுள்ளது. ஆளுவதற்கு ஆதரவை வாங்குகிறது.
கடந்த புத்னகிழமை, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறி மொகிதின் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கினார்.
“பல” அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஒப்புக்கொண்டார்.