கோலாலம்பூர்: நாட்டில் இன்று 82 புதிய கொவிட்19 சம்பவங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று 89 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்றைய மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 10,769- ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,785- ஆகவும் உள்ளது.
புதிய சம்பவங்களில், 79 உள்ளூர் தொற்றுகளாகும். மூன்று இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களாகும். இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து 133- ஆக உள்ளது.
79 உள்ளூர் தொற்றுநோய்களில் 53 மலேசியர்கள். 26 பேர் வெளிநாட்டினர் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையில் கூறினார்.
சபாவில் மொத்தம் 64 புதிய சம்பவங்கள் கண்டறியப்பட்டன. பெந்தேங் தொற்றுக் குழுவிலிருந்து 33 பேரும், பங்காவ்-பங்காவ் தொற்றுக் குழுவிலிருந்து 25 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
851 பேர் இன்னும் மருத்துவ மையங்களில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், எட்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களில் நான்கு பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
இதனிடையே, வாக்களிப்பு இன்று முடிந்ததும் சபாவிலிருந்து வீடு திரும்புவோர் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள் என்று நூர் ஹிஷாம் கூறினார்.
தற்போதைய நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, சபா பயண வரலாற்றைக் கொண்ட நபர்களால் கொவிட்19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை, சபாவிலிருந்து வரும் அனைத்து நபர்களிடமும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த பயணிகள் தொற்றிலிருந்து விடுபடுவதை உறுதிசெய்ய இரண்டு வாரங்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.