கோத்தா கினபாலு : நேற்று சனிக்கிழமை நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து யார் அடுத்த முதலமைச்சர் என்பதில் இன்னும் குழப்பமும், கருத்து முரண்பாடுகளும் நிலவுகிறது.
இன்று காலை முதல் ஜிஆர்எஸ் எனப்படும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கிடையில் யார் முதலமைச்சர் என்பதில் இணக்கமான முடிவு ஏற்படவில்லை.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் எந்த ஓர் இணக்கமான முடிவும் ஏற்படவில்லை.
எனினும், அம்னோவின் புங் மொக்தார், பெர்சாத்து கட்சியின் ஹாஜிஜி முகமட் நூர் ஆகிய இருவரில் ஒருவர் முதலமைச்சராவது என்றும் அது யார் என்பதை சபா மாநில ஆளுநரே முடிவு எடுக்கட்டும் என்றும் இரண்டு அணிகளும் இறுதியில் ஒப்புக் கொண்டன.
அதைத் தொடர்ந்து புங் மொக்தார், ஹாஜிஜி நூர் இருவரும் ஆளுநர் மாளிகையை நோக்கி இன்று பிற்பகலில் புறப்பட்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு அவர்கள் சபா ஆளுநரைச் சந்திப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், சபா ஆளுநர் அவர்களைச் சந்திக்கவில்லை. அடுத்த முதல்வராக யாரை நியமிப்பது என்பதில் தனக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக ஆளுநர் ஜூஹார் மஹிருடின் தெரிவித்திருக்கிறார்.
பிற்பகலில் புங் மொக்தார், ஹாஜிஜி நூர், ஸ்டார் தலைவர் ஜெப்ரி கித்திங்கான், பிபிஎஸ் தலைமைச் செயலாளர் ஜாஹிட் ஜாஹிம் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக சபா ஆளுநர் மாளிகையை வந்தடைந்தனர்.
பின்னர் பிற்பகல் 3.22 மணியளவில் அனைவரும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறினர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய புங் மொக்தார் அடுத்த முதல்வராக யாரை நியமிப்பது என்பதில் தனக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக ஆளுநர் ஜூஹார் மஹிருடின் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.