கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஏர் ஆசியா நிறுவனம் அடுத்த கட்டமாக தனது ஊழியர்களைப் பணிகளில் இருந்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக முன்அறிவிப்பு கொடுக்கப்படும் என ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி ரியாட் அஸ்மாட் பெர்னாமாவிடம் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையால் சில நூறுபேர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்வதுதான் பொருத்தமான நடவடிக்கை என ஏர் ஆசியா நிருவாகம் கருதுகிறது.
இருந்தாலும் தனது ஊழியர்களை ஏர் ஆசியா ஒரேயடியாக கைவிட்டுவிடாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவ உதவிகள், தொழில் ரீதியான ஆலோசனைகள், விமானக் கட்டணங்களில் சலுகைகள் போன்ற அம்சங்களில் உதவிகள் வழங்கப்படும்.
மேலும், நடப்பு பொருளாதார நெருக்கடிகள் தணிந்து, ஏர் ஆசியா மீண்டும் மாமூல் நிலைமைக்குத் திரும்பினால் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றாலும், ஏர் ஆசியா நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது என்பது முக்கியம் என்றும் நிருவாகம் கருதுவதாக ரியாட் அஸ்மாட் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 250 ஊழியர்களை ஏர் ஆசியா வேலை நிறுத்தம் செய்தது.
இதற்கிடையில் நிதி உதவிக்காக அரசாங்க உதவியையும் ஏர் ஆசியா அணுகியிருக்கிறது. எனினும் இது குறித்த பதில் எதனையும் ஏர் ஆசியா இன்னும் அரசாங்கத்திடம் இருந்து பெறவில்லை.