கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை நண்பகல் வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 கொவிட்-19 நோய்த் தொற்றுகள் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 86 உள்ளூர் பரவல்கள் ஆகும். இதில் பாதிக்கப்பட்ட 84 பேர் மலேசியர்கள். எஞ்சிய இருவரும் வெளிநாட்டவர்.
பெரும்பான்மையான தொற்றுகள் சபா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டன. 35 தொற்றுகள் சபாவில் பதிவு செய்யப்பட்டன.
மொத்தம் பதிவான 89 தொற்றுகளில் 3 இறக்குமதித் தொற்றுகளாகும்.
புதிதாக 2 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 136 ஆக உயர்ந்திருக்கிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களின் மூவருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
புதிய தொற்றுகளின் எண்ணிக்கையோடு சேர்த்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 11,224 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.
1,121 பேர் இன்னும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.