Home One Line P1 சபா : 3 புதிய துணை முதல்வர்கள் நியமனம்; மோதல்கள் தொடங்கின!

சபா : 3 புதிய துணை முதல்வர்கள் நியமனம்; மோதல்கள் தொடங்கின!

747
0
SHARE
Ad

கோத்தாகினபாலு : சபாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஹாஜிஜி முகமட் நூர் தனது மாநில அரசாங்கத்தின் துணை முதல்வர்களாக மூவரை நியமித்தார்.

சபா பெர்சாத்து தலைவரான ஹாஜிஜி முகமட் நூர் புங் மொக்தார், ஸ்டார் கட்சியின் தலைவர் ஜெப்ரி கித்திங்கான், பிபிஎஸ் உதவித் தலைவர் ஜோகிம் குன்சலாம் ஆகியோரே துணை முதல்வர்களாகத் தேர்வு பெற்ற மூவராவர்.

புங் மொக்தார் பொதுப்பணி அமைச்சராகப் பொறுப்பேற்பார். ஜெப்ரி கித்திங்கான் விவசாயம், உணவுத் தொழில் அமைச்சராகப் பதவியேற்றார். ஜோகிம் குன்சலாம் வாணிபம், தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார்.

#TamilSchoolmychoice

மேலும் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மொத்தம் முதலமைச்சர் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) பதவியேற்றனர்.

மேலும் சில அமைச்சர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோதல்கள் தொடங்கி விட்டதற்கான அறிகுறி

இதற்கிடையில், அரசாங்கம் பதவியேற்ற முதல் நாளிலேயே கட்சிகளுக்கிடையிலான மோதல்கள் தொடங்கிவிட்டன என்பதை நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

துணை முதல்வராக நியமிக்கப்பட்ட புங் மொக்தாருக்கு முதலில் உள்ளாட்சி, வீடமைப்புத் துறை அமைச்சு ஒதுக்கப்பட்டு அதற்கான சுற்றறிக்கையும் பத்திரிகையாளர்களிடம் தரப்பட்டது.

எனினும், போர்க்கொடி தூக்கிய புங் மொக்தார் தனக்கு பொதுப் பணி அமைச்சு ஒதுக்கப்படவேண்டும் என உறுதியாக நின்றார்.

இதைத் தொடர்ந்து பதவியேற்புக்குப் பின்னர் புங் மொக்தார் பிற்பகலில் 1.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் புங் மொக்தார் பிற்பகல் 1 மணியளவில் அம்னோ உதவித் தலைவர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மாஹ்ட்சிர் காலிட், அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஆகியோருடன் புங் மொக்தார், ஹாஜிஜியின் அலுவலகம் வந்தடைந்தார்.

அவர்களுக்குள் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர் புங் மொக்தார் கேட்டுக் கொண்டபடி அவருக்கு பொதுப் பணி அமைச்சே ஒதுக்கப்பட்டது.

இதன்மூலம் அம்னோவுக்கும், பெர்சாத்து கட்சிக்கும் இடையில் எழவிருந்த நெருக்கடி தணிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் பொதுப்பணி அமைச்சை ஹாஜிஜி தனது பெர்சாத்து கட்சியின் சபா துணைத் தலைவர் மாசிடி மாஞ்சுமுக்கு ஒதுக்கியிருந்தார்.

புங் மொக்தார் கிளப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து, ஹாஜிஜி விட்டுக் கொடுத்தார். புங் மொக்தாருக்கே பொதுப்பணி அமைச்சு ஒதுக்கப்பட்டது.

மாசிடி மாஞ்சுமுக்கு உள்ளாட்சி, வீடமைப்புத் துறை ஒதுக்கப்பட்டது. பிபிஎஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் ஜாஹிட் ஜாஹிம் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சுப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிற்பகல் 2.00 மணிக்கு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலமைச்சர் ஹாஜிஜி அமைச்சு மாற்றங்களை அறிவித்தார்.

எனினும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாசிடி மாஞ்சும் தனது வருத்தத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தினார்.

“பொதுப் பணி அமைச்சராக நியமிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் உள்ளாட்சி வீடமைப்பு அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறேன். இப்போதைக்கு எதுவும் நான் கூறப்போவதில்லை. பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் நடந்ததை விவரிப்பேன்” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவங்களின் மூலம் சபா அரசியலில் அம்னோவுக்கும், பெர்சாத்துவுக்கும் இடையிலான மோதல்கள் தொடர் போராட்டமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.