கோலாலம்பூர்: கட்டாய உழைப்பைப் பயன்படுத்துவதாக அமெரிக்க சுங்க, எல்லைக் கட்டுப்பாடு (ஜிஎஸ்டி) துறையின் குற்றச்சாட்டுகளை பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் (எப்ஜிவி) ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மறுத்துள்ளது.
நேற்று எப்ஜிவியிலிருந்து செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ய ஜிஎஸ்டி தடை விதித்ததை அடுத்து இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், தொழிலாளர்களின் உரிமைத் தரங்களை நிலைநிறுத்துவதற்கும் “உறுதியான நடவடிக்கைகளை” எடுத்துள்ளதால், இந்தத் தடை குறித்து ஏமாற்றமடைவதாக எப்ஜிவி தெரிவித்துள்ளது.
“எப்ஜிவி 2015 முதல் எழுப்பப்பட்ட அனைத்து சிக்கல்களும், பொதுப் பார்வைக்கு இருந்தன என்பதை வலியுறுத்த விரும்புகிறது. மேலும் நிலைமையை மேம்படுத்த எப்ஜிவி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
“எப்ஜிவியின் முயற்சிகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு பொதுவில் கிடைக்கின்றன” என்று அது இன்று காலை ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஜிஎஸ்டியின் ஒரு வருட கால விசாரணையில், கட்டாய உழைப்பு, உரிமைகள், மோசடி, உடல் மற்றும் பாலியல் வன்முறை, அச்சுறுத்தல்கள், அடையாள ஆவணங்களை வைத்திருக்காத தொழிலாளர்களின் நிலையை சுரண்டுவது உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
எப்ஜிவி மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த விசாரணையில் கவலைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க சுங்க, எல்லை பாதுகாப்பு (ஜிஎஸ்டி) அதிகாரிகள் வழங்கிய செம்பனை எண்ணெய் தடுப்பு உத்தரவைத் தொடர்ந்து, எப்ஜிவி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் பங்குகள் இன்று 6.95 விழுக்காடு சரிந்தன.
செப்டம்பர் 30 முதல், அனைத்து அமெரிக்க துறைமுகங்களும், எப்ஜிவி நிறுவனத்தின், செம்பனை எண்ணெய் மற்றும் செம்பனை எண்ணெய் தயாரிப்புகளை நிறுத்தி வைக்கும் என்று ஜிஎஸ்டி தெரிவித்துள்ளது.