Home One Line P1 செல்லியல் பார்வை : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!

செல்லியல் பார்வை : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!

751
0
SHARE
Ad

(கடந்த புதன்கிழமை செப்டம்பர் 29-ஆம் தேதி செல்லியல் பார்வை காணொலித் தளத்தில் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்)

செல்லியல் பார்வை | Sabah Results : What are the 3 surprises? | 29 September 2020

சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!

நடந்து முடிந்த சபா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மூன்று ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

  • முதலாவது சபா மக்கள், சபா மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற ஷாபி அப்டாலின் பிரச்சார முழக்கம் எடுபடாமல் போனது;
  • இரண்டாவது ஆச்சரியம், அன்வார் இப்ராகிம் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னர் விடுத்த ஆட்சி மாற்ற அறிவிப்பு வாக்காளர்களிடையே எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதது.
  • முதல் முறையாக சபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணி போட்டியிட்ட 29 தொகுதிகளில்  17 தொகுதிகளில் வெற்றி பெற்றது  மூன்றாவது ஆச்சரியம்.
#TamilSchoolmychoice

இந்த மூன்று ஆச்சரியங்களை ஒவ்வொன்றாக சற்று விரிவாகப் பார்ப்போம்!

முதல் ஆச்சரியம் : சபா கட்சிகளுக்கே வாக்களியுங்கள் பிரச்சாரம் தோல்வி

சபா தேர்தலில் ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சியினர் சபா மக்கள் சபா உரிமைக்காகப் போராடும் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும்; குறிப்பாக மேற்கு மலேசியக் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் என தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

சபா தேர்தலுக்கு முன்பாக சபா மக்களிடையே மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது; சபா உரிமைகளை சபா மக்களே முடிவு செய்ய வேண்டும்;

என்பது போன்ற முழக்கங்கள் எல்லா முனைகளிலும் ஒலித்தன. அதன் பிரதிபலிப்பாக அந்தப் பலனை வாரிசான் கட்சியே தேர்தலில் அறுவடை செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்தப் பிரச்சாரங்கள் எடுபடவில்லை.

மாறாக, மேற்கு மலேசியா கட்சிகளின் செல்வாக்கு சபாவில் இன்னும் குறையவில்லை.

அம்னோ, பெர்சாத்து, ஜசெக, பிகேஆர் ஆகிய மேற்கு மலேசியக் கட்சிகள் இணைந்து 33 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இவை மூன்றுமே மேற்கு மலேசியக் கட்சிகள்.

ஷாபி அப்டாலின் தோல்விக்கு அவரது கூட்டணிக் கட்சிகளும் ஒரு முக்கியக் காரணம். ஜசெக மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அமானா போட்டியிட்ட ஒரே தொகுதியான தஞ்சோங் கிராமட்டில் தோல்வியைத் தழுவியது.

பிகேஆர் தனக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது.

வாரிசானோடு அணி அமைத்து போட்டியிட்ட சபாவின் உள்ளூர் கட்சியான உப்கோ சொந்த சின்னத்தில் 12 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது.

வாரிசான் கூட்டணிக் கட்சிகள் மேலும் ஓரிரு தொகுதிகளைக் கூடுதலாக வென்றிருந்தால் கூட ஷாபி அப்டாலுக்கு ஆட்சி அமைக்கும் அதிகாரம் கிடைத்திருக்கும்.

2-வது ஆச்சரியம் : எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத அன்வாரின் அறிவிப்பு

தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பேன், பிரதமராவதற்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று விட்டேன் என அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு ஷாபி அப்டாலுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் ஷாபியின் வாரிசான் கூட்டணியில் அன்வாரின் பிகேஆர் கட்சியும் இடம் பெற்றிருந்ததுதான்!

அதேவேளையில் நான்தான் பிரதமர், எனவே, மத்திய அரசாங்கத்தோடு இணைந்து வேலை செய்யக்கூடிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுங்கள் என மொகிதின் யாசின் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.

அந்தப் பிரச்சாரத்தையும் அன்வாரின் அறிவிப்பு முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. மாறாக எந்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்தது என்று அன்வார் அறிவித்தாரோ அதே பெரிக்காத்தான் கூட்டணி சின்னத்தில் 17 தொகுதிகளில் வெற்றி காணப்பட்டிருக்கின்றது.

அன்வார் நான்தான் இனி பிரதமர் என அறிவித்த பின்னரும், அவர் போட்டியிட்ட 7 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே அவரது பிகேஆர் கட்சி வெற்றி பெற முடிந்தது.

எனவே அன்வாரின் அறிவிப்பு சபா அரசியலில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதது தேர்தல் முடிவுகள் காட்டும் இரண்டாவது ஆச்சரியம்.

3-வது ஆச்சரியம் : முதல் முறையிலேயே 17 தொகுதிகளை வென்ற தேசியக் கூட்டணி

மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சி முன்னெடுத்த புதிய கூட்டணி பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி.

29 தொகுதிகளில் போட்டியிட்ட இந்தக் கூட்டணி எடுத்த எடுப்பிலேயே 17 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.

சபா தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் தேசியக் கூட்டணி என்ற அமைப்பே கட்டமைக்கப்பட்டது. அதற்கென சொந்த சின்னம் கூட இல்லை.

“பெரிக்காத்தான் நேஷனல்” என்ற வார்த்தைகள் கொண்ட கொடிதான் சின்னம்.

இருப்பினும் சபா தேர்தலில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட அந்த சின்னத்தில் 17 தொகுதிகளில் வெற்றி கண்டிருக்கிறது தேசியக் கூட்டணி. மொகிதின் தலைமையிலான பெர்சாத்து 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட ஸ்டார் கட்சி 6 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.

தேசியக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் சொந்த சின்னத்தில் போட்டியிட்ட பிபிஎஸ் என்ற பார்ட்டி பெர்சாத்து சபா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இது தேர்தல் முடிவுகள் காட்டும் மூன்றாவது ஆச்சரியம்.

மேலோட்டமாகப் பார்த்தால் மொகிதினின் பிரதமர் என்ற செல்வாக்கு, மத்திய அரசாங்கத்தின் பணபலம், அதிகாரபலம் ஆகியவை  இந்த வெற்றிக்கு என்று கருதலாம்.

எப்படியிருந்தாலும், சபா போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தில் – அறிமுகப்படுத்தி சில வாரங்களே ஆன ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு – 17 தொகுதிகளை தேசியக் கூட்டணி வென்றது ஆச்சரியம்தான்.

அரசியல் பார்வையாளர்களுக்கு இந்த மூன்று ஆச்சரியங்களைத் தந்த சபா மாநிலத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஹாஜிஜி முகமட் நூர் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார்.

சபா அரசியலில் மேலும் சில ஆச்சரியங்கள் தொடரலாம்.

-இரா.முத்தரசன்