சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வருகிற அக்டோபர் 31- ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில், தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஒரு சில நடவடிக்கைகளுக்கு தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில், அவ்வப்போது ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், பொது மக்கள் அதிகமாகக் கூடும் கடற்கரை போன்ற பகுதிகள் தொற்று பரவுவதற்கு ஆபத்தான இடமாகக் கருதப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு நடந்து வந்தது. விசாரணையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் வரும் அக்டோபர் 31- ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரையிலும் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.