கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 375 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டில் எட்டாவது நாளாக மூன்று இலக்கு எண் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
18 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,519- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
375 புதிய சம்பவங்களின்படி, நாட்டில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 14,368- ஆக உள்ளது என்று அவர் கூறினார்.
மொத்தம் 3,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 60 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 20 பேருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.
இன்று புதிதாக ஐந்து இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறப்பு எண்ணிக்கை 146- ஆக அதிகரித்துள்ளது.
சபாவில் அதிகமாக 271 சம்பவங்கல் பதிவாகி உள்ளன. கெடாவில் 16 சம்பவங்கள் மட்டுமே பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 36 சம்பவங்களும், கோலாலம்பூரில் 12 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.
தொடர்ந்து நாட்டில் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சபாவில் மூன்று மாவட்டங்களும், சிலாங்கூரில் ஒரு மாவட்டமும் நேற்று நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று இப்பகுதிகளில் கட்டுப்பாட்டு ஆணை நள்ளிரவு 12 மணிக்கு நடைமுறைக்கு வரும்.