புது டில்லி: இந்திய மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் டில்லி மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 74.
பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவரான அவர் சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது மகனும் எல்.ஜே.பி தலைவருமான சிராக் பாஸ்வான், “அப்பா இந்த உலகில் இல்லை. ஆனால், நீங்கள் எங்கிருந்தாலும் எனக்குத் தெரியும், நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள். ” என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய பயனீட்டாளர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராக இருந்தார்.
சனிக்கிழமை (அக்டோபர் 3), பிரதமர் நரேந்திர மோடி, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சிராக் பாஸ்வானை அழைத்து தனது தந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
சிராக் பாஸ்வான் தனது தந்தையை கவனித்துக்கொண்ட விதத்தை அவர்கள் பாராட்டினர். பாஸ்வான் இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
ராம் விலாஸ் பாஸ்வான் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற தலித் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
ராம் விலாஸ் பாஸ்வான் 2014 முதல் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.