Home One Line P1 துணை மாவட்டங்களிலிருந்து வெளியேறுவதற்கு காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்

துணை மாவட்டங்களிலிருந்து வெளியேறுவதற்கு காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்

482
0
SHARE
Ad

கிள்ளான்: இன்று வெள்ளிக்கிழமை முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள கிள்ளான் துணை மாவட்ட வீட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், வேலை அல்லது பிற முக்கிய விஷயங்களுக்காக இப்பகுதியை விட்டு வெளியேற காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்.

அனுமதி படிவத்தை தெற்கு கிள்ளான் மாவட்ட காவல் துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ நூர் அசாம் ஜமாலுடின் தெரிவித்தார்.

கிள்ளான் துணை மாவட்டத்தில் உள்ள பாயு பெர்டானா, ஸ்ரீ அண்டாலாஸ் மற்றும் புக்கிட் திங்கி ஆகிய இடங்களில் சாலைத் தடைகள் பொருத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“பொதுமக்களுக்கு வசதியாக, அனுமதிகளுடன் உதவிகளை வழங்கவும், அருகிலுள்ள காவல் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிர்க்கவும் தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலைக்காக பயணிப்பவர்கள், தங்கள் முதலாளி வழங்கிய கடிதத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

“ஒப்புதல் வழங்குவதற்கு முன், ஒவ்வொரு விண்ணப்பமும் அத்தியாவசிய சேவைகளின் கீழ் உள்ளதா இல்லையா என்பதை நாங்கள் ஆராய்வோம், ” அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

சிவப்பு மண்டல பகுதிகளில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

இதற்கிடையில், கிள்ளானில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவது துணை மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், முழு கிள்ளான் மாவட்டத்திற்கும் பொருந்தாது என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று தெளிவுபடுத்தினார்.

இன்று நள்ளிரவு தொடங்கி, இது கிள்ளான் மாவட்டத்தை மட்டுமே உள்ளடக்கியது என்றும் கிள்ளான் துறைமுக மற்றும் காபார் போன்ற பிற பகுதிகளை உள்ளடக்கியது அல்ல என்று அமைச்சர் கூறினார்.

“சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகியோரிடமிருந்து எனக்கு ஆலோசனை கிடைத்துள்ளது.

“நாங்கள் எப்போதும் மாநில அரசு மற்றும் சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்துடன் ஊராட்சி மன்றத்துடன் தொடர்பில் இருக்கிறோம்,” என்று அவர்  செய்தியாளர் கூட்டத்தில் நேற்று கூறினார்.

நிபந்தனைக்களுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான பிற விஷயங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நேரத்தில் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருளாதாரத் துறைகளும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன என்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்திருந்தார்.

“கிள்ளான் மாவட்டம் ஒரு பெரிய தொழில்துறை செயல்பாட்டு மையமாகும். இது மலேசியாவில் கொள்கலன் துறைமுகங்களுக்கான முக்கிய மையமாக உள்ளது.

“எனவே, கிள்ளான் மாவட்டத்தின் தற்போதைய சுகாதார நிலைமை மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இன்றைய சந்திப்பில், கிள்ளான் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருளாதாரத் துறைகளும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடிவு செய்துள்ளது.”

“கிள்ளான் மாவட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் இணக்கத்தை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது,” என்று அவர்  ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.