Home அரசியல் சிலாங்கூரில் அம்னோ ஆட்டம் கண்டது – முகமட் தாயிப் பாஸ் கட்சியில் சேர்ந்தார்

சிலாங்கூரில் அம்னோ ஆட்டம் கண்டது – முகமட் தாயிப் பாஸ் கட்சியில் சேர்ந்தார்

536
0
SHARE
Ad

Muhammad-Taib-Featureஏப்ரல் 15 கடந்த சில நாட்களாக நிலவி வந்த ஆரூடங்களை உறுதிப் படுத்தும் வண்ணம், சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரும், அம்னோவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமான முகமட் முகமட் தாயிப் இன்று பாஸ் கட்சியில் இணைவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் அவர் அதிகாரபூர்வமாக பாஸ் கட்சியில் சேர்வது வேட்பு மனுத்தாக்கலுக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் அறிவிக்கப்படும். காரணம் தேர்தலில் போட்டியிடுவதற்காகத்தான் அவர் பாஸ் கட்சியில் சேர்ந்திருக்கின்றார் என்ற குறை கூறல்களைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமட் தாயிப் அவரது உறுப்பினர் விண்ணப்ப பாரத்தை பாஸ் கட்சியின்  ஆன்மீகத் துணைத் தலைவர் ஹருண் டின்னிடம் சமர்ப்பித்துள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் கமாருடின் ஜபார் உறுதிப்படுத்தியுள்ளார்.

முகமட் தாயிப்பின் கட்சித் தாவல் அம்னோ வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் இந்த தருணத்தில் அம்னோவின் பிரச்சார பீரங்கிகளுள் ஒருவராகக் கருதப்பட்ட முகமட் தாயிப்பின் இந்த முடிவு நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு நேர்ந்திருக்கும் ஒரு பெரும் பின்னடைவாகும்.

1986ஆம் ஆண்டு முதல்1997ஆம் ஆண்டு வரை சிலாங்கூர் மாநிலத்தின் பலம் பொருந்திய மந்திரி பெசாராக வலம் வந்த முகமட் தாயிப், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர், சிலாங்கூர் சுல்தானின் புதல்வியை மறுமணம் செய்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளானார். அந்த திருமணத்தின் மூலம் அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு.

அதன் பின்னர், ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் 3.8 மில்லியன் ஆஸ்திரேலியா பணம் ரொக்கமாக வைத்திருந்தார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அதன் பின்னர் நடந்த வழக்கில் விடுதலையானார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இன்னமும் செல்வாக்கும் ஆதரவும் கொண்டவராக கருதப்படும் முகமட் தாயிப்பின் வருகையால் மக்கள் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் கூடுதல் பலம் பெற்றுள்ளது என்பதோடு அந்த மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் அதன் இலக்கிற்கும் முகமட் தாயிப்பின் பிரச்சாரம் பெரிதும் உதவும்.

அதே நேரத்தில், சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற அம்னோ-தேசிய முன்னணியின் முழக்கம் இனி முடங்கிப் போகும் எனத் தெரிகின்றது.

பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற அதிர்ச்சி தரும் அரசியல் அதிரடி மாற்றங்கள் மலேசிய அரசியல் அரங்கில் மேலும் பல அரங்கேற்றம் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.