கோலாலம்பூர்: தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர் மொகிதின் யாசினுக்கு பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக ஆதரவளிப்பதாக பாஸ் வலியுறுத்தி உள்ளது.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கொண்டு வந்த புதிய ஆட்சி அமைப்பு கூற்றுக்கு கட்சி சிறிதும் ஈர்க்கப்படவில்லை என்றும், பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு என்றும் பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறினார்.
” தனிப்பட்ட நலன்கள் மற்றும் பேராசைகளைக் கொண்ட ஒரு அவநம்பிக்கையான நடவடிக்கையாக பாஸ் இதனைக் கருதுகிறது. அத்துடன் தேசிய கூட்டணி அரசாங்கம் கொவிட் 19 பிரச்சனையையும் நாட்டின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் போது இம்மாதிரியான கூற்றுகள் ஏற்புடையதல்ல
“இந்த விஷயத்தில், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் பேராசை நடவடிக்கையை ஏற்க மாட்டார் என்றுபாஸ் மீண்டும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதற்கு பதிலாக அவர் சட்டத்தின் விதிகள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில் அதைக் கையாள்வார். “என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவரான அன்வார், அக்டோபர் 13, செவ்வாயன்று, மாமன்னரைச் சந்தித்து மக்களவையில் தமது பெரும்பான்மை ஆதரவைப் பற்றிய விவரங்களை முன்வைப்பதாகக் கூறியிருந்தார்.