Home கருத்தாய்வு தேர்தல் களம் நேரடி பார்வை: உலுகிளாங்கை உலுக்கிய 20,000 மக்கள் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம்

தேர்தல் களம் நேரடி பார்வை: உலுகிளாங்கை உலுக்கிய 20,000 மக்கள் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம்

708
0
SHARE
Ad

Ulu-Kelang-Anwarஏப்ரல் 16 சிலாங்கூரில் மலாய்க்கார வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான டத்தோ கெராமாட் உள்ளிட்ட உலுகிளாங் வட்டாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் மாநில பிகேஆர் வேட்பாளர்களை ஏப்ரல் 14ஆம் தேதி இரவு அறிவிப்பார்  என்ற செய்தி இணையத் தளங்களிலும் மற்றும் பல தகவல் ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக  வெளியிடப்பட்டு வந்தது.

#TamilSchoolmychoice

ஒரு மிகப் பெரிய திடலில் மாபெரும் மேடை அமைக்கப்பட்டு சிறப்பான ஒளி, ஒலி அமைப்புகளோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த –  நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நாங்கள் சென்றடையும் போது ஏறத்தாழ மணி 10க்கும் மேல்ஆகிவிட்டிருந்தது.

ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை நிறுத்தி விட்டு செல்ல வேண்டிய கட்டாயம். சாலையின் இரு பக்கமும் ஆயிரக்கணக்கான கார்கள் போலீசார் அபராதம் விதிப்பார்கள் என்ற பயமில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைக் குறிக்கும் வண்ணம், பிகேஆர் கட்சி சின்னத்தோடு இணைக்கப்பட்ட ஒரு பெரிய பலூன் ஆகாய வெளியில் ஆடிக் கொண்டு தூரத்தில் இருந்து வருபவர்களுக்கும் கலங்கரை விளக்கம் போல் வழிகாட்டிக் கொண்டிருந்தது.

போகும் வழியெங்கும் பிகேஆர், ஜசெக, பாஸ் கட்சிக் கொடிகள் வரவேற்பு வளையம் போல் கட்டப்பட்டிருந்தன.

ஏதோ இரவுச் சந்தை நடைபெறுவது போல் பேரீச்சம் பழம் முதற்கொண்டு, புத்தகங்கள், மக்கள் கூட்டணி தலைவர்களின் உரைகள் அடங்கிய குறுந்தட்டுகள் போன்றவை வரிசையாக கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருந்தன.

நடந்து சென்று நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையும் போது அந்த பரந்து விரிந்த திடல் முழுக்க மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தார்கள்.

மேடையில் பேசுகின்றவர்களைக் கேட்கத்தான் முடியுமே தவிர பார்க்கும் போது அவர்கள் சிறு புள்ளிகளாக தெரியும் அளவுக்கான தூரத்தில் இருந்துதான் நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.

திடல் முழுக்க மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தார்கள். திரும்பிய திசையெங்கும் தலைகளாகத் தெரிந்தன.

இது தவிர சுற்றியிருந்த வீட்டு வளாகங்களிலிருந்தும் மக்கள் அன்வாரின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தில் ஏறத்தாழ 90 சதவீதம் பேர் மலாய்க்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்வார் இப்ராகிம் எழுச்சி மிகுந்த உரை

மற்றவர்கள் பேசி முடிந்ததும் ஏறத்தாழ 11 மணியளவில் பேசத் தொடங்கிய அன்வார் இப்ராகிம் வழக்கம் போல் தனது இடி முழக்கத்துடன் மக்கள் ரசிக்கும் வண்ணம் பேசி கலகலப்பூட்டினார்.

மலாய் வாக்காளர்கள் அதிகம் இருப்பதைப் புரிந்து கொண்ட அவரது பேச்சில் திருக்குரானிலிருந்து நிறைய மேற்கோள்கள் எடுத்துக் காட்டப்பட்டன.

நாலாபக்கமும் மக்கள் பார்க்கும் வண்ணம் திறந்த வெளி மேடை அமைக்கப்பட்டிருந்ததால் கையில் ஒலிபெருக்கியுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டே பேசினார் அன்வார் இப்ராகிம்.

ஏற்கனவே, பல முறை கூட்டங்களில் அவர் பேசிய கருத்துக்களின் சாராம்சத்தை மீண்டும் தொட்டுப் பேசிய அன்வார், தான் ஏன் மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்தேன் என்பதையும் உருக்கமாக விவரித்தார்.

1999ஆம் ஆண்டில் நாடு முழுக்க போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர்கள் அனைவரும் தோற்க பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மட்டும் தனது மனைவியை வெல்ல வைத்து பிகேஆர் கட்சியின் மானத்தையும் தனது கௌரவத்தையும் காப்பாற்றியவர்கள் பெர்மாத்தாங் பாவ் வாக்காளர்கள் என்பதை நினைவுறுத்திய அவர், தொகுதி மாறப் போகின்றேன் என்று தான் கூறிவிட்டு பெர்மாத்தாங் பாவ் சென்றபோது அங்கு தனது தீவிர ஆதரவாளர்கள் கண்ணீருடன் தன்னை எதிர் கொண்ட விதத்தையும் நெகிழும் வண்ணம் விவரித்தார்.

நாட்டின் 7வது பிரதமரைத் தந்த தொகுதி என்ற பெருமையை பெர்மாத்தாங் பாவ் பெற வேண்டும் என்ற தொகுதி வாக்காளர்களின் ஏக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலேயே போட்டியிட தான் முடிவு செய்ததாகவும் அன்வார் கூறினார்.

வேட்பாளர்கள் அறிவிப்பு

பின்னர் சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடும் பிகேஆர் கட்சியின் வேட்பாளர்களை மேடையில் ஒவ்வொருவராக அழைத்து அறிமுகப்படுத்தினார்.

அவர்களை மேடைக்கு அழைப்பதற்கு முன்னால் அவர்களின் கல்வித் தகுதி உள்ளிட்ட சில விவரங்களைக் கூறி அவர்களை அறிமுகப்படுத்தினார். முதலில் நாடாளுமன்ற வேட்பாளர்களையும் பின்னர் சட்டமன்ற வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார்.

வேட்பாளர்களில் பெரும்பாலோர் மிகச் சிறந்த கல்வித் தகுதிகளையும், அரசியல் பின்னணிகளையும் கொண்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலாய் வாக்காளர்களின் ஆதரவு

உலு கிளாங் கூட்டம் இரவு ஏறத்தாழ 11.45 மணியளவில் முடிந்த போது கலைந்து சென்ற கூட்டத்தைப் பார்த்தபோதுதான் கூட்டத்தின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

முழுக்க முழுக்க மலாய்க்காரர்களாகத் தெரிந்த கூட்டத்தினரைப் பார்த்தபோது ஒன்றைப் புரிந்து கொள்ள முடிந்தது.

மலாய் வாக்காளர்களை, மக்கள் கூட்டணி – குறிப்பாக அன்வார் தலைமையிலான பிகேஆர் கட்சி – பெருமளவில் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அன்வார் கலந்து கொண்ட உலு கிளாங் இடத்தைச் சுற்றி அம்பாங், கோம்பாக், பாண்டான், நாடாளுமன்றத் தொகுதிகளும் அந்த தொகுதிகளில் உள்ளடங்கும் சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன என்பதால் இந்த பகுதிகளை மீண்டும் மக்கள் கூட்டணி சுலபமாக வெல்லும் என்பதை உலுகிளாங் கூட்டம் சொல்லாமல் சொல்லியது.

சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற மக்கள் கூட்டணிக்கு மலாய்க்கார வாக்குகள் பெரும்பான்மையாக அல்லது குறைந்தது 30 சதவீதமாவது தேவை. அந்த வாக்குகளோடு, சீனர்களின் 70 சதவீத வாக்குகளும் சேரும்போது சிலாங்கூர் மாநிலத்தின் பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகள் மீண்டும் மக்கள் கூட்டணியின்வசமாகும்.

எதிர்பார்க்கப்படும் இந்திய வாக்குகளும் சேர்ந்து கொண்டால் மக்கள் கூட்டணி மேலும் கூடுதலான பலம் பெறும்.

உலுகிளாங், டத்தோ கிராமாட் போன்ற மலாய்க்கார வாக்காளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 20,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களை பிகேஆர் கவர்ந்திழுக்க முடிகின்றது என்பதை ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற உலுகிளாங் பிரச்சாரக் கூட்டம் தெளிவாக எடுத்துக் காட்டியது.

இதே அரசியல் சூழ்நிலை மே மாதம் 5 ஆம் தேதி வரை நீடிக்கும் பட்சத்தில் பெரும்பான்மையான மலாய், சீன வாக்குகளின் துணையோடு சிலாங்கூர் மாநில அரசை மக்கள் கூட்டணி சுலபமாக மீண்டும் கைப்பற்றும் என்பதை உறுதியாக நம்பலாம்.

அதற்கு ஒரு முன்னுதாரணமாகவே உலுகிளாங் பிரச்சாரக் கூட்டம் விளங்கியது.

-இரா.முத்தரசன்