கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு இன்று சாட்சியமளிக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு வந்திருந்தார்.
புக்கிட் அமான் துணை இயக்குநர், மியோர் பாரிடலாத்ராஷ் வாஹிட் இது குறித்து உறுதிப்படுத்தினார். அவர் மாலை 3 மணிக்கு அங்கு வந்ததாகக் கூறினார்.
முன்னதாக, குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹுசிர் முகமட், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியம் அளிக்க போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் பிரிவு 233 ஆகியவற்றின் படி இந்த வழக்கின் விசாரணை திறக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
“இன்றுவரை, ஆறு காவல் துறை புகார் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. காவல் துறை இன்னும் ஊடகங்களில் பரவலாக பரவி வரும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் கூறினார்.