Home One Line P1 செல்லியல் பார்வை : “மலேசியாவில் கண்ணதாசன்” – சில நினைவுகள்

செல்லியல் பார்வை : “மலேசியாவில் கண்ணதாசன்” – சில நினைவுகள்

1504
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | மலேசியாவில் கண்ணதாசன் – சில நினைவுகள் | Kannadasan in Malaysia – some reminiscences | 17 October 2020

(கவியரசன் கண்ணதாசனின் நினைவு நாளை முன்னிட்டு “மலேசியாவில் கண்ணதாசன்  – சில நினைவுகள்” என்னும் தலைப்பில் செல்லியல் பார்வை காணொலி தளத்தில் 17 அக்டோபர் 2020-ஆம் நாள் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்)

அக்டோபர் 17-ஆம் தேதி கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள். 1981-ஆம் ஆண்டில் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார். எனினும் அவர் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பின்னரும், அவரது எழுத்துகள் தமிழர்களின் வாழ்க்கையோடும், உணர்வுகளோடும், என்றென்றும் இரண்டறக் கலந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

மலேசியாவுக்கும் கண்ணதாசனுக்கும் இடையிலான உறவும், தொடர்பும் கவிஞராலேயே பல தருணங்களில் பெருமையுடன் கூறப்பட்டிருக்கிறது.

தான் பார்க்க விரும்பிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என கவிஞரே குறிப்பிட்டிருக்கிறார்.

1971-இல் தனது முதல் மலேசிய வருகையை மேற்கொண்டார் கண்ணதாசன். அதன் பிறகு பல முறை மலேசியா வந்திருக்கிறார். ஒருமுறை மலேசியா குறித்து கண்ணதாசன் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

உலகத்திலேயே நான் பார்க்க விரும்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் தாய்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான், கம்போடியா.

ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டுக்கு போவது அதிசயமில்லை, காலங்கள், தூரங்கள் சுருங்கிவிட்டன. மலேசியாவுக்கு பல தடவை போய் இருக்கிறேன். மலேசியா, சிங்கப்பூரில் 42 நாள் தங்கினேன்

33 நாள் கூட்டங்களில் பேசினேன் பல கூட்டங்களில் பாட்டு பாடும் படி வற்புறுத்தினார்கள்.

சில ராகம் எனக்கு வராது என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை

நானும் எந்த பாட்டு வருமோ அவற்றை பாடி முடித்தேன். தேவாரம், திருவாசகம் பாடினேன்.

“பார்த்தேன் சிரித்தேன்; எந்த ஊர் என்றவனே; காதலென்னும் வாதை உற்று; என்பவை நான் அதிகமாக பாடிய பாடல்களாகும்.

அறிஞர் அண்ணா அவர்கள் வந்து போனதற்கு பிறகு உங்களுக்குத்தான் இவ்வளவு பெரிய கூட்டம் என்று சொன்னார்கள்

  • இவ்வாறு கண்ணதாசன் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

நாடு முழுக்க சென்று உரையாற்றிய கண்ணதாசன்

மலேசியாவுக்கு வந்தபோதெல்லாம் கண்ணதாசனுக்கு ராஜ மரியாதையுடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சிகள் எங்கும் நடந்தேறின. வானொலி தொலைக்காட்சிகளில் சிறப்புப் பேட்டிகள் ஒளிபரப்பப்பட்டன. அவரது கூட்டங்களில் ஏராளமானோர் திரண்டனர்

இந்த நாட்டில் அவருக்கான எண்ணற்ற இரசிகர்களும், வாசகர்களும் இருந்தனர். அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களும் இன்னும் நிறைய பேர் நாட்டில் இருக்கின்றனர்.

நமது நாட்டின் பெருமைகளையும், மலேசியப் பிரமுகர்களின் சிறப்புகளையும், ஆலயங்கள், மக்கள் குறித்தும் கண்ணதாசன் பல பாடல்களிலும் கவிதைகளிலும் விவரித்திருக்கிறார்.

முருகு சுப்பிரமணியன்

1981 ஏப்ரல் மாதத்தில் கண்ணதாசன் மலேசியாவிற்கு வந்தபொழுது நகரம், தோட்டப்புறம் என்றெல்லாம் அதிகமான கூட்டங்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான முருகு சுப்பிரமணியன்தான் அந்தக் கூட்டங்களுக்கான ஏற்பாட்டை செய்தார்.

நமது நாட்டில் தமிழ் நேசன் பத்திரிகையில் ஆசிரியராகவும் பின்னர் புதிய சமுதாயம் இதழின் ஆசிரியராகவும் எழுத்துப் பணிகளைத் தொடர்ந்த பிரபல பத்திரிகையாளர் அமரர் முருகு சுப்பிரமணியன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.

ஆரம்ப காலத்தில் தமிழ் நாட்டில் இருந்தபோது, பொன்னி என்ற இலக்கிய இதழை நடத்தியவர் முருகு சுப்பிரமணியம். அப்போது இளங்கவிஞரான கண்ணதாசனின் கவிதைகளை பொன்னி இதழில் இடம் பெறச் செய்திருந்தார் முருகு சுப்பிரமணியம். இதுவும் அவர்கள் இருவருக்குமான நெருக்கத்திற்கான காரணங்களில் ஒன்று.

ஒருமுறை கோலாலம்பூர் மாரா அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு காத்திருக்க, கவிஞரோ மாலை ஐந்து மணி அளவில்தான் மேடைக்கு வந்தாராம். ஆனாலும் கூட்டம் சிந்தாமல் சிதறாமல் அதுவரை காத்திருந்தது.

“பலருக்கும் பல்வேறு மதங்கள் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த மதம் தாமதம்” என அந்த நிகழ்ச்சியில் கண்ணதாசன் பேசத் தொடங்கியபோது காத்திருந்த களைப்பையும் மறந்து மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர் என்கிறார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர்.

செந்துல் தண்டாயுதபாணி ஆலயத்தைப் போற்றிப் பாடிய கவிஞர்

அதைப்போல தலைநகர் செட்டியார் மண்டபத்தில் கவியரசு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அந்த ஆலய வளாகமே நிரம்பி வழிந்ததாம்.

அந்த வேளையில் செந்தூல் தண்டாயுதபாணி ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் திருமுருகக் கடவுளைப் போற்றி, அந்த சந்நிதானத்திலேயே பாடல் ஒன்றை எழுதித் தந்தார் கண்ணதாசன். இந்தப் பாடலை கண்ணதாசன் சொல்லச் சொல்ல எழுத்து வடிவில் எழுதித் தந்தவர் அமரர் முருகு சுப்பிரமணியம்.

அந்த அரிய காட்சியை அருகிலிருந்து பார்க்கும் பாக்கியம் பெற்றவன் நான் என்கிறார் நமது மலேசியக் கலைஞர் கரு கார்த்திக்.

செந்துல் தண்டாயுதபாணி ஆலயம்

இன்று கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளராகப் பணியாற்றுகிறார் கரு.கார்த்திக். கவிஞர் செந்துல் தண்டாயுதபாணி முருகனைப் பற்றிப் பாடிய அந்தப் பாடல் இன்றைக்கும் செந்துல் செட்டியார்கள் மண்டபத்தின் நுழைவாயிலில் கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பாடல் பின்வருமாறு;

ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை – கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான்
ஆகாயம் பூமியிடை நீராவி போல் வடிவில்
ஆதாரமான பெருமான்

மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
மெய்யாள வந்த பெருமான்
மின்னாகி இடியாகி மழையாகி காற்றாகி
விளைவாக நின்ற பெருமான்

கோலாலம்பூர் வளர்கோ தண்டபாணி – இவன்
கோவில் கொண்டாடு மனமே
கூற்றேதும் வாராது கொடுநோயும் சேராது
குறையாது செல்வமிகுமே

ஓம் என்ற சிறுமுட்டை உள்வீடு அவன் வீடு
உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மணமுண்டு
உன் வாழ்வு கந்தன்வசமே

நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
நடவாது வேலனிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உனதுள்ளம்
நலம்யாவும் வீடு வருமே

கோமன்னன் வாழ்கின்ற கோலாலம்பூர் செந்தூல்
கொடிகட்டி ஆள விடுமே
கொண்டாடு கொண்டாடு தண்டாயுதத் தானை
குறையாது செல்வமிகுமே

செந்துல் செட்டியார் மண்டபத்திற்கு சென்றால் நுழைவாயிலின் இடப்புற சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் அப்பாடலை இப்பொழுதும் காணலாம்.

வள்ளல் ரெங்கசாமிப் பிள்ளைக்கு கவிஞர் வழங்கிய வாழ்த்துப் பா

1975-ஆம் ஆண்டில் மேற்கொண்ட தனது மலேசியப் பயணத்தின்போது கண்ணதாசன், ரெனா என அன்புடன் அழைக்கப்படும் பினாங்கு வள்ளல் ரெங்கசாமிப் பிள்ளையின் இல்ல நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இன்றைக்கு முன்னணி இந்திய வணிகராகவும், அண்மையில் மாமன்னரின் டான்ஸ்ரீ விருது பெற்றவருமான டான்ஸ்ரீ துரைசிங்கத்தின் (படம்) தந்தைதான் ரெங்கசாமிப் பிள்ளை.

அப்போது கண்ணதாசன், வள்ளல் ரெங்கசாமி பிள்ளையைப் புகழ்ந்து ஒரு கவிதையைப் புனைந்தார்.

அதுதான் கீழ்க்காணும் பாடல் :

கோடைமறைந்தால் வெய்யிலாவான்
கோமகன் மறந்தால் அரசனாவான்
ஆறு குளிர்மலை மேகமென
அன்பை இறைக்கும் துணையாவான்!

ஏடுகொளாதொரு புகழ் கொண்டான்
இன்முக வள்ளல் திருரெனா
பாடுகமனமே அவன் வாழ்வு
பல்கி பெருகென பாடுகவே!

1981-ஆண்டில் கவிஞர் மேற்கொண்ட இறுதிப் பயணம்

மலேசியாவிற்கு அவர் 1981-ஆம் ஆண்டில் வருகை மேற்கொண்டிருந்தபோது கண்ணதாசன் பின்வருமாறு நண்பர்களிடம் கூறியதாக ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது:

“முதல் முறை நான் மலேசியாவிற்கு வந்தபோது பேரறிஞர் அண்ணா மறைந்திருந்தார்; இடையில் சிங்கப்பூருக்கு வந்த வேளையில் தந்தை பெரியார் இயற்கை எய்தி இருந்தார். இப்பொழுது மீண்டும் மலேசியாவிற்கு வந்துள்ளேன். இந்த வேளையில் எந்தத் தலைவருக்கு என்ன ஆகப் போகிறதோ” என்று கோலாலம்பூரில் தம் நண்பர் வட்டத்தில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டாராம் கவியரசர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பயணமே மலேசியாவுக்கான கவிஞரின் இறுதிப் பயணமாக அமைந்தது.

சென்னை திரும்பிய கொஞ்ச காலத்தில் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டிருந்த பொழுது, அவரது உடல் நலம் பாதிப்படைந்தது.

சிக்காகோ மருத்துவமனையில் 1981 அக்டோபர் 17-ஆம் நாள் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தார் கவியரசர்.

அவர் மறைவுக்குப் பின்னர் எத்தனையோ நாடுகளில் அவருக்காக விழாக்களும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் தொடர்ந்து 32 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கண்ணதாசன் விழா எடுத்து அவரை நினைவு கூர்ந்து கொண்டாடும் நாடு – உலகிலேயே மலேசியா ஒன்றுதான்!

ஆண்டுதோறும் தவறாமல் கண்ணதாசனுக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறது மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் (படம்) தலைமையிலான கண்ணதாசன் அறவாரியம்.

இவ்வாறாக, நம்மை விட்டுப்பிரிந்து 39 ஆண்டுகள் கடந்து விட்டாலும் கவிஞர் கண்ணதாசனுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவு இன்னும் தொடர்கிறது.

– செல்லியல் தொகுப்பு

தொடர்புடைய செல்லியல் காணொலி :

செல்லியல் காணொலி : “கண்ணதாசனும் மலேசியாவும்” எம்.சரவணன் சிறப்புரை