கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்று குறித்து பேசிய சிலாங்கூர் அரசாங்கம் தற்போது “கண்களை மூடிக்கொண்டு போராடுகிறது” என்று கூறியது.
சுகாதார அமைச்சகம் சம்பவங்கள் குறித்த முக்கியமான தரவுகளை பகிர்வதில்லை என்று அது கூறியது.
தொற்றுநோயை சமாளிக்க பொது சுகாதார உத்திகளை வகுத்து செயல்படுத்த மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.
அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து, சிலாங்கூர் கொவிட் -19 பணிக்குழு (எஸ்டிஎப்சி) சுகாதார அமைச்சிலிருந்து எந்தவொரு தரவையும் பெறவில்லை என்றும், இதனால் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைப் பாதிப்பதாக அதன் தலைவர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் கூறினார்.
தொற்று பகுதிகளில் வளாகங்களை மூடுவது, தொடர்பைக் கண்டறிதல் மற்றும் அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் இலவச பரிசோதனை நடத்துவது போன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிலாங்கூரில் சம்பவங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் தரவு பகிர்வை நிறுத்தும் முடிவு மாநில அரசின் முயற்சிகளை பெரிதும் பாதித்துள்ளது.
“தரவு முக்கியமானது, விரிவான விவரங்கள், தரவுகளின் அடிப்படையில் நாம் சரியான நடவடிக்கைகளை எடுக்கலாம். எங்கள் பகுப்பாய்வு மற்றும் செயல் திட்டமிடல் மிகவும் துல்லியமானது” என்று முன்னாள் சுகாதார அமைச்சருமான அவர் கூறினார்.