கோலாலம்பூர்: நாட்டில் கொவிட்-19 தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 23) அவசரகாலம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இன்று காலையில் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்த அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
மாலை 4.40 மணியளவில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் குவாந்தானில் உள்ள, அப்துல் அசிஸ் அரண்மனை வளாகத்திற்குள் தனது அமைச்சர்களுடன் நுழைவதைக் காண முடிந்தது என ஊடகங்கள் தெரிவித்தன.
அங்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை பிரதமர் சந்தித்தார். அவசரகால ஆணைக்கான ஒப்புதலை அவர் மாமன்னரிடமிருந்து பெறுவதற்காக அந்தச் சந்திப்பை நடத்தினார் என நம்பப்படுகிறது.
மாலை 4.40 மணியளவில் பிரதமரின் காரும் மற்ற பாதுகாப்பு வாகனங்களும் பகாங் மாநில அதிகாரத்துவ வாகனங்களும் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தன.
மலேசிய ஆயுதப் படைகளின் தலைவர் அஃபண்டி புவாங்கின் அதிகாரத்துவ காரும் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தது. மலேசியக் காவல் துறையின் தலைவர் டான்ஸ்ரீ ஹாமிட் பாடோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அரண்மனையிலிருந்து மொகிதின் யாசின் தனது அமைச்சர்களுடன் வெளியேறினார்.
பிரதமரைச் சந்திக்க மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற தகவல் பரவியதை அடுத்து பிற்பகல் 2.30 மணி தொடங்கி அரண்மனை வாயிலில் பத்திரிகையாளர்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
அந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆயுதப் படைகளின் தலைவர் அஃபண்டி புவாங் கலந்து கொண்டார் என பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.
எனினும் பலரும் எதிர்பார்த்தது போல இன்று வெள்ளிக்கிழமை இரவு அவசரகால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாது என இரவு 10.00 மணி வரையிலான ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.