வாஷிங்டன்: இஸ்ரேலும் சூடானும் தங்கள் உறவுகளை இயல்பாக்குவதற்கும் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க பயங்கரவாத பட்டியலிலிருந்து சூடானை அகற்றும் என்று கூறியது.
“இது இஸ்ரேலுக்கும் சூடானுக்கும் நம்பமுடியாத ஒப்பந்தம்” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
“பல தசாப்தங்களாக, சூடான் இஸ்ரேலுடன் போர் நிலையில் உள்ளது. அவர்கள் யுத்த நிலையில் இருந்தனர் மற்றும் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணித்தனர். எந்த உறவும் இல்லை.” என்று வெள்ளை மாளிகை கூறியது.
மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து நீண்டகால சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரை இராணுவம் வெளியேற்றியதில் இருந்து கடந்த ஆண்டு முதல் சூடானுக்கு ஒரு இடைக்கால அரசாங்கம் உள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் பரஸ்பர சமாதானம் ஏற்படும் வரை இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று பாலஸ்தீனிய தலைவர்கள் நீண்ட காலமாக அரபு நாடுகளை கேட்டுக்கொண்டனர். இஸ்ரேல்-சூடான் ஒப்பந்தத்தை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அலுவலகம் வெள்ளிக்கிழமை கண்டித்தது.