அரசாங்க நிர்வாகத்தின் நிலைத்தன்மைக்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்த அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தியதற்கும் மொகிதின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“இந்த நாட்டிலோ அல்லது மலேசியாவின் எந்தப் பகுதியிலோ அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னர் இப்போது தேவையில்லை என்ற கருத்து குறித்த இஸ்தானா நெகராவின் அறிக்கையை அமைச்சரவை கவனத்தில் எடுத்துக்கொண்டது.
“அமைச்சரவை மாமன்னரின் உத்தரவைப் பற்றி மேலும் விவாதிக்கும்.
“இந்த நேரத்தில் அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தின் முன்னுரிமை கொவிட் -19 தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதாகும்” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
“எனது அரசாங்கத்தின் மீதான மாமன்னரின் நம்பிக்கைக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு இடையூறு ஏற்படுத்தாத ஆலோசனையை வரவேற்கிறேன்” என்று மொகிதின் கூறினார்.
நேற்றிரவு மொகிதினின் இல்லத்தில் பல அமைச்சர்கள் கலந்து கொண்ட முறைசாரா கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னரிடம் மொகிதின் முன்மொழிந்தார்.
கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று அரசாங்கம் விவரித்தது.
எவ்வாறாயினும், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், அவருக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என்ற ஊகங்களுக்கு மத்தியில், தனது நிலைப்பாட்டைக் காக்க மொகிதின் மேற்கொண்ட முயற்சி இது என்று கூறப்படுகிறது. இதனால் அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மொகிதின் பெரும்பான்மையை இழந்தால், அவர் 2021 வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்க முடியாது. மேலும், அவர் பெரும்பான்மை இழந்ததாகக் கொள்ளப்படும்.
மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர், மொகிதினின் கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா முடிவு செய்தார்.
கொவிட் -19- க்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தின் நிர்வாகத்தை அச்சுறுத்தக்கூடாது என்றும் சுல்தான் அப்துல்லா நினைவுபடுத்தினார்.