கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (26 அக்டோபர்) இறைவனடி சேர்ந்த மலேசியாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவரான வீரமான் மறைவுக்கு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“தஞ்சாவூரைச் சேர்ந்தவராக இருந்தாலும் மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவராக இத்தனை ஆண்டு காலம் வலம் வந்த கவிஞர் வீரமான் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஓர் அசைக்க முடியாத ஆளுமையாக அவர் இருந்துள்ளார். வெள்ளி நிலவு எனும் அன்னாரின் கவிதைத் தொகுப்பு, அந்த கவிஞரை இன்றும் நம் மனதில் நிலைக்கச் செய்துள்ளது. “வெள்ளி நிலவு” வீரமான் எனும் முகவரியையும் அன்னாருக்குக் கொடுத்துள்ளது” என சரவணன் தனது இரங்கல் அறிக்கையில் வீரமானுக்குப் புகழாரம் சூட்டினார்.
“மலேசியாவின் 10 சிறந்த மரபுக் கவிதையாளர்களில் இவரும் ஒருவர் என்பதை யாரும் மறுக்க இயலாது. பல பரிசுகளையும், பதக்கங்களையும் தன் இலக்கியப் பணிக்காகப் பெற்ற இந்த கவிஞரின் இறுதி ஆசை, “மலேசியாவிலேயே இறந்து, நண்பர்கள் இறுதி மரியாதை செலுத்த வேண்டும்” என்பதை அறிந்து மெய்சிலிர்க்கிறேன். அவர், தான் வலம் வந்த இலக்கிய உலகத்தை எவ்வளவு நேசித்திருந்தால், குடும்பம் தஞ்சாவூரில் இருந்தும் கூட இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க முடியும். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் நமச்சிவாய; பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க; போனவர் புண்ணியம் நம்முடன் சேர்க” என ஆழ்ந்த வருத்தத்துடன் தனது இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார் சரவணன்.