சென்னை : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கம் நடத்து “யாதும் ஊரே” இணையம் வழி தமிழ் மாநாடு நேற்று வியாழக்கிழமை, அக்டோபர் 29-ஆம் தேதி மாலை தொடங்கியது.
நேற்று தொடங்கிய இந்த 3 நாட்கள் மாநாடு இன்று அக்டோபர் மாதம் 30-ஆம் தேதியும் நாளை, அக்டோபர் 31-ஆம் தேதியும் தொடர்ந்து நடைபெறும்.
இம்மாநாட்டில் உலகெங்கும் உள்ள தமிழ் மன்றங்கள், தமிழ் பள்ளிகள் ,தமிழ் அமைப்புகள் , சமூக சேவை அமைப்புகள் , தொழில் முனைவோர்க்கான அமைப்புகள் ஆகிவற்றினை பற்றிய விவரங்கள் இடம் பெறும் .
இம்மாநாட்டைப் காண உங்கள் பெயர் ,மின்னஞ்சல் முகவரியுடன் கீழ்க்காணும் சுட்டியைப் பயன்படுத்தி பதிவு செய்தல் அவசியம் .
வலைத் தள முகவரி :
http://yaadhumoorae.in
ATEA Flyer:
http://yaadhumoorae.in/conclave-2020/
http://yaadhumoorae.in/conclave-2020/
மாநாட்டின் நோக்கங்கள்
வான மளந்த தனைத்து மளந்திடும்
வண்மொழி வாழிய வே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே !
நிமிர்ந்து தோளுயர்த்தி மொழியின் பெருமையை உணர்ந்து பாடிய பாரதியின் வழியில் நின்று நம் மொழியை வாழ்த்தி வணங்கி, பரந்த உலகின் பரவியிருக்கும் நம் தமிழ் மக்கள் ஒருங்கிணைய எடுத்திருக்கும் ஒரு முயற்சிதான் இம்மாநாடு.
தமிழக முதல்வர் திரு. எடப்பாடி K பழனிச்சாமி அவர்களால் முன்னெடுக்கப்பட்டு இந்த வருடம் முதல்வரின் வழிகாட்டுதலோடு தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கம் (Southern India Chamber of Commerce and Industry (SICCI) இதனை உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து மூன்று நாள் மாநாடாக இணையம் வழியே நடத்துகிறார்கள்.
இதில் ஒவ்வொரு நாடும் தன் நாட்டில் உள்ள தமிழ் சார்ந்த அமைப்புகள் அவர்களின் சமூகப் பணி, தொழில் முனைவோர், அவர்கள் சந்தித்த சவால்கள், வெற்றிகள், பெண்களின் உரிமைகள் மற்றும் சாதனைகள் ஆகியவைப் பற்றிய உரையும் இடம் பெறும்.
சுமார் 35 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். 700-க்கும் மேற்பட்ட கலாச்சார, வாணிப அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்கு பெறுகின்றன. 300-க்கும் பதிப்பாளர்கள் பங்கு கொள்கிறார்கள். அத்துடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட மெய்நிகர் கண்காட்சிக்கூடங்கள் (virtual expo stalls) இணையம் வழி அமைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழக கிராமிய மற்றும் செவ்வியல் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இந்த மாநாட்டில் இடம் பெறும்.
தமிழர்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழ் சங்கங்கள்/மன்றங்கள், தமிழ் பள்ளிகள், தொழில் முனைவோர், ஊடகங்கள், வாய் பாட்டு, பரதம், இசைக்கருவிகள் முதலியவற்றைக் கற்பிப்போர் ஆகியோரின் விவரங்கள் “யாதும் ஊரே” வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்ய இருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை இணைத்திருக்கும் தாய்மொழியாம் தமிழை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சொல்லும் பள்ளிகளின் பணி சீரியதாகும்.
இப்பள்ளிகளின் விவரங்களும் மாநாட்டு வலைத் தளத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
மாநாட்டில் பங்கேற்கும் மலேசியப் பிரமுகர்கள்
இன்று நடைபெறும் மாநாட்டில் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளில் “உலகத் தமிழர்களின் தொடர்புகள் – அன்றும்,இன்றும் இனி நாளையும்” (Panel Discussion on ‘Tamil Disapora Linkages – Then, Now and Tomorrow’) கலந்துரையாடலில் மலேசியாவின் சார்பில் இரு பிரமுகர்கள் பங்கு கொண்டு தங்களின் கருத்துகளை வழங்குவார்கள்.
முரசு குழுமத்தின் தலைவரான முத்து நெடுமாறன் மேற்கண்ட கலந்துரையாடலில் பங்கு பெறுவார். கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் அனைத்துலக அளவில் கையடக்கக் கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடுகளை வழங்கிய முன்னணி தொழில்நுட்ப நிபுணர் ஆவார். பல தெற்கு ஆசிய, தென்கிழக்காசிய மொழிகள் கையட்டக் கருவிகளின் உள்ளீடு காண்பதற்கு அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
மலேசியாவின் இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவரான டான்ஸ்ரீ டத்தோ பாலனும் இந்த கலந்துரையாடலில் பங்கு பெறும் மற்றொரு மலேசியப் பிரமுகராவார். பாலன் எஸ்எம்ஆர் குழுமத்தின் தலைவராவார். சைபர் ஜெயா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமாவார்.