கோலாலம்பூர்: 2021 வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்க நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் நாளை பல நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2021 வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு பிரதமர் மொகிதின் யாசினுக்கு நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் வலியுறுத்திய பின்னர் இந்த சந்திப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
“அமைச்சர் இந்த ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயாவில் நிதி அமைச்சக அலுவலகத்தில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களை சந்திப்பார்.
“பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள மொத்தம் 10 தலைவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்” என்று பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.
பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை தொடர்பு கொண்டபோது, கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை அவரது கட்சி ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தினார்.
அக்டோபர் 29-இல், பிகேஆர் தலைவரும், நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான அன்வார் இப்ராகிம் கையெழுத்திட்ட ஊடக அறிக்கையில், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் வரவு செலவு திட்டம் குறித்து முறையான விவாதங்களை நடத்துமாறு தேசிய கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
“ஆம், நாங்கள் ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்.
“ஒவ்வொரு கட்சியும் மூன்று நபர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும். மூத்த தலைவர்களில் ஒருவர் இந்த விவாதத்திற்கு தலைமை தாங்குவார்” என்று மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
“அவர்கள் (தேசிய கூட்டணி அரசாங்கம்) நாங்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அது மக்களின் நலன்களைத் தொடாவிட்டால் அதை எவ்வாறு ஆதரிப்பது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“எனவே, கடன் தள்ளுபடி நீட்டிப்பு மற்றும் சில முக்கியமான பிரச்சனைகளை வலியுறுத்த நாங்கள் அவர்களை சந்திப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.