Home One Line P1 ‘வெள்ளி நிலவு’ கவிஞர் வீரமான் – ந. பச்சை பாலனின் நினைவஞ்சலி

‘வெள்ளி நிலவு’ கவிஞர் வீரமான் – ந. பச்சை பாலனின் நினைவஞ்சலி

1974
0
SHARE
Ad
வீரமான், இளமையிலும் – முதுமையிலும்…

(கடந்த திங்கட்கிழமை 26 அக்டோபர் 2020-ஆம் நாள் மலேசியாவின் புகழ்பெற்ற மரபுக் கவிஞர்களில் ஒருவரும் “வெள்ளி நிலவு” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டவருமான கவிஞர் வீரமான் காலமானார். அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் இலக்கியப் படைப்பாளி ந.பச்சைபாலன். வீரமான் உடல்நலம் குன்றியிருந்த காலத்தில் அவரைச் சந்திக்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களையும், வீரமான் குறித்த சில விவரங்களையும் அப்போது எழுதிய ஒரு கட்டுரையில் விவரித்திருந்தார் பச்சைபாலன். பொருத்தமான அந்தக் கட்டுரை வீரமான் அவர்களுக்கான நினைவஞ்சலியாக இங்கே பதிவேற்றம் காண்கிறது)

ந.பச்சை பாலன்

நாடறிந்த கவிஞர் வீரமான் முதுமை, உடல்நலக் குறைவு காரணமாகக் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலை  மணிக்கவிஞர் பாதாசன்வழி அறிந்த சிரம்பான் நண்பர் பெ.அருணாசலம் என்னிடம் கூறினார். அங்கிருந்து வெளியேறிய பின் கிள்ளானில் உள்ள தனியார் சமூகநல இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக அடுத்த தகவல் வந்தது. எனக்கு அதிர்வூட்டியது.

சில மாதங்களுக்கு முன் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைக் கண்டு நலம் விசாரித்து வந்தேன். உடல் நலமடைந்து அங்கிருந்து விடைபெற்றவருக்கு மீண்டும் என்ன ஆனது? ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரைக் காண முகவரி பெற்றுக் கிள்ளானுக்குப் புறப்பட்டேன்.

வீரமான் குடும்பத்தினருடன்
#TamilSchoolmychoice

இந்நாட்டுத் தமிழாசிரியர்கள், மாணவர்களிடையே கவிஞர் வீரமான் என்றால் உடனே நினைவுக்கு வருபவை எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வுக்குத் தேர்வான அவரின் ஆறு கவிதைகள்தாம். அதிலும் குறிப்பாக, ‘சீனரிடம்’ எனும் தலைப்பிலான கவிதை, மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிகம் கவர்ந்த கவிதை. நம்மிடமிருந்து சீனர்கள் பல பாரம்பரியத் தொழில்களைக் கற்றுக்கொண்டு வணிகம் பெருக்கி வாழ்வில் முன்னேறினார்கள். நாம் அவர்களிடமிருந்து எதைக் கற்றோம்? என அங்கதச் சுவை மிளிர எள்ளல் நடையில் அக்கவிதை அமைந்திருக்கும்.

தமிழக மண்ணில் பிறந்து மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த கவிஞர் வீரமான், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து கவிதைகளைப் படைத்து வருகிறார். இவரின் கவிதைகள் உணர்ச்சிப் பாங்கும் எளிமையும் எழுச்சியும் மிக்கவை; மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும், இனப்பற்றும் கொண்டவை. மலேசிய வாழ்வைத் தெளிவாகக் காட்டுபவை.

மாரியப்பன் எனும் இயற்பெயர் கொண்ட வீரமான்

மாரியப்பன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தமிழகத்தில் கோடியக்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தொடக்கக் கல்வியை இவர் அங்கேயே கற்றார். முதலில் இவரின் தந்தை வீரப்பிள்ளைதான் பினாங்கு வந்தார். “நானும் வரப்போகிறேன்” என்று தந்தைக்குக் கடிதம் எழுதினார். “வேண்டாம், வீட்டிலுள்ள வெண்கல சட்டியை விற்றாவது உன்னைப் படிக்க வைக்கிறேன். நீ  தொடர்ந்து படி” என்று அப்பா மறுத்தார். ஆனால், வீரமான் கேட்கவில்லை.

பினாங்குக்குக் கப்பலேறிவிட்டார். படிக்கத்தான் இங்கு வந்தார். ஆனால், இந்த மலேசிய மண் அவரை நிரந்தமாய் ஈர்த்து அரவணைத்துக்கொண்டது.

1956-இல் மலேசியாவிற்கு வந்தவர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். பொன்நகை விற்பனைக் கடையில் நீண்ட காலம் பணியாற்றினார். பின்னாளில் இதழியல் துறைக்கு வந்தார். மெய்ப்புத் திருத்தும் பணியும் செய்து வந்துள்ளார். ஆயினும், கவிதைத்துறைதான் மலேசியத் தமிழர்களுக்கு அவரை நன்கு அடையாளங்காட்டியது.

நல்லாரைச் சேர்ந்தொழுகின் நற்பண்புகள் நிறைவதுபோல், கவிஞர்களை நெருங்கியதால் வீரமான் கவிதை எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். பினாங்கில் அசன்கனி, கரு.திருவரசு, கே.எம்.யூசூப், மூ.சேது  ஆகிய நால்வரும் சேர்ந்து ‘நால்வர்’ எனும் பெயரில் கவிதை எழுதினார்கள். கையெழுத்து அழகாக இருக்குமென்பதால் வீரமான்தான் அக்கவிதைகளை எழுதிக் கொடுப்பார்.

பின்னாளில், காரைக்கிழார், மைதீ.சுல்தான் ஆகியோருடன் வீரமானும் இணைந்து ‘திரிகூடர்’ எனும் பெயரில் கவிதைகள் எழுதினார்.  அது கவிதை உணர்வுகள் செழித்திருந்த பொற்காலம். கவிபுனையும் ஆற்றலை நன்கு வளர்த்துவிட்டது.

தமிழ் மணிமன்றப் பாசறையின் வளர்ப்பு

தமிழ் மணிமன்றப் பாசறையில் வளர்ந்தவரான இவர் பினாங்கில் அதன் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவர். அதன் சொற்பயிற்சி மன்றம் இவரின் திறனை வளர்த்துவிட்டது எனலாம். அதனால்தான்,

தமிழணி மணிமன்றம் தந்ததொரு பிச்சையினால்

தமிழ்பாடும் கவிஞனென தலைநிமிர்ந்து நிற்கின்றேன்

என்று பாடுகிறார்.

மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் மாநாடுகளிலும் விழாக்களிலும் நடந்த பாவலரங்குகளில் பங்கேற்றுள்ளார். தலைநகரில் நீண்ட காலம் இயங்கிய கவிதைக்களம் நடத்தியவர்களில் ஒருவராய்த் தொண்டாற்றியுள்ளார். இவர் தம் கவிதைகளைத் தொகுத்து ‘வெள்ளி நிலவு’ (1979), ‘வீரமான் கவிதைகள்’ (1994), ‘வீரமான் கவியமுது’ (2013) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் ‘தமிழ் முரசு’ நாளிதழ் நடத்திய வெண்பா போட்டிதான் வீரமானை அறிமுகப்படுத்தியது. தந்தையின் பெயரான வீரப்பிள்ளையோடு தம் பெயரையும் இணைத்து வீரமான் எனும் பெயரில் போட்டியில் கலந்துகொண்டார்.

இவருக்குத்தான் முதல் பரிசு. “யார் இந்த வீரமான்?” எனப் பலரையும் அந்தப் போட்டி முடிவு திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் பின்னர், பல போட்டிகளில் பரிசுகள்  வென்றுள்ளார். கவிதைத் துறையில் வழங்கிய பங்களிப்புக்காகப்  பல விருதுகளும் பெற்றுள்ளார். தமிழ் நேசன் பவுன் பரிசு, தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கக் கவிதைப் பரிசு, டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003), டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு (2017) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கண்ணதாசனுக்கு வரவேற்புக் கவிதை வாசித்த வீரமான்

கவியரசு கண்ணதாசன் பினாங்கு வந்தபோது வீரமான்தான் வரவேற்புக் கவிதை வாசித்தார். மாலைகளைக் கழற்றிப்போட்ட கண்ணதாசன் வீரமானின் வரவேற்புக் கவிதையைப் பத்திரமாக வைக்கும்படி சொன்னாராம். பின்னர் வீரமானை வாழ்த்தி,

சேரமான் சிலம்பிற்கண்ட செந்தமிழ் பாடவல்ல

வீரமான் வாழ்க பன்னாள் விளங்கவே கவிதை

என்று எழுதித் தந்தாராம். கண்ணதாசன் தமிழால் வாழ்த்துப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணி மகிழ்ந்தவர் வீரமான்.

வீரமான் கவியமுது நூல் வெளியீட்டு விழா

கடந்தாண்டு,  நண்பர் பெ.அருணாசலம் ‘வீரமான் கவியமுது’ நூல் வெளியீட்டு விழாவைச் சிரம்பானில் ஏற்பாடு செய்தார். வழக்கமாக நூல் வெளியீடுகளில் குறைவான வருகையாளர்களே கலந்துகொள்கிறார்கள். அதை மாற்றி, வெற்றி விழாவாக்கத் திட்டமிட்டோம்.

நாடு முழுவதும் தமிழாசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களைப் புலனம் வழி தொடர்புகொண்டு ஆதரவு கேட்டோம். எதிர்பாராத வகையில் நூறு பேர் பெயர்களை முன்பதிவு செய்து தம் பங்களிப்பை வழங்கினர். இந்நாட்டு நூல் வெளியீட்டு விழாவில் இப்படியொரு திட்டம் யாரும் செயல்படுத்தியதில்லை. தமிழ்த் தொண்டர் பெ.அருணாசலத்தின் விடாமுயற்சியால், பலரின் பங்களிப்பால் சிரம்பானில் இந்தச் சாதனை படைக்கப்பட்டது.

ஐம்பது பேர் கலந்துகொண்டாலும் நூறு பேரின் ஆதரவால் நிகழ்ச்சி சிறப்பானது. உடல்நிலை தளர்ந்த நிலையிலும் கவிஞர் வீரமான் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தம் அளவிறந்த மகிழ்வைப் பகிர்ந்துகொண்டார். காலமெல்லாம் சமூகம் குறித்துச் சிந்தித்த கவிஞரின் உழைப்பை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியாக அது அமைந்தது.

கவிஞர் வீரமானின் மனைவி காலமாகிவிட, இப்பொழுது இவரின் இரண்டு மகன்களும் மகளும் தமிழகத்தில் உள்ளனர்.  ஆயினும், நீண்ட காலமாக இவர் இங்கே, அவர்கள் அங்கே என வாழ்ந்ததால் மலேசியாவில் இருப்பதையே இவரின் மனம் விரும்பியது.

அதனால்தான், தமிழகம் திரும்பிப் பிள்ளைகளோடு இணையாமல் தம் அந்திம காலத்தை மலேசிய மண்ணில் கழிக்க இவர் மனம் விழைந்தது. கிராமத்தில் இருந்த நிலங்களைத் தம் அண்ணன் தம்பிகளுக்கு எழுதித் தந்துவிட்டார். தஞ்சாவூரில் இருந்த நிலங்களைத் தம் பிள்ளைகளுக்குத் தந்து விட்டார்.  இனி, இவருக்கென்று எதுவும் இல்லை.

சமூக நல இல்லத்தில் வீரமானைச் சந்தித்தபோது…

கிள்ளானில், தனியார் சமூகநல இல்லத்திற்குச் சென்று சேர்வதற்குள் என் மனம் பலவற்றை அசை போட்டுப் பார்த்தது. என் எதிர்பார்ப்புக்கு மாறாக, இரண்டு மாடிகள் கொண்ட பெரிய இல்லமாக அது இருந்தது.

உள்ளே நுழைந்து கவிஞரைத் தேடினேன். பத்துப் பதினைந்து பேர் அங்கே தென்பட்டார்கள். கீழ்த் தளத்தில் வலப்பக்கத்தில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவர் “வாங்க பாலன்” என முகத்தில் புன்னகை மலர வரவேற்றார்.

வலது காலில் பெரிய கட்டு. தவறிக் கீழே விழுந்ததால் காலில் முறிவு ஏற்பட்டதாகக் கூறினார். அவர் அங்கிருப்பது தெரியாது என்பதால் இன்னும் யாரும் வந்து பார்க்கவில்லை என்றார். உடல் வேதனையும் உள்ளத்தில் சோர்வும் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசினார்.  அங்கு நாளிதழ் வாசிக்கும் வாய்ப்பு இல்லாததால் வெளியுலகத் தொடர்பற்றுத் தனிமையில் இருப்பதாக உணர்வதாகக் கூறினார்.

அது நாற்பது ஆண்களுக்கு அடைக்கலம் தரும் இல்லமாக இருந்தது.  பெரும்பாலும் முதுமையால் கைவிடப்பட்டவர்கள் அல்லது ஆதரவற்றவர்கள். வீரமான் யார் என்பது அங்கு யாருக்கும் தெரியவில்லை. அங்குப் பணியில் இருந்தவர்களிடமும் அதன் உரிமையாளரிடமும் கவிஞரைப் பற்றிக் கூறினேன். கிள்ளானில் வசிக்கும் என் அன்புத் தம்பி செல்வகுமாரை அப்பொழுதே அழைத்துக் கவிஞரின் தேவையைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினேன். “அன்பாய்க் கவனிக்கிறார்கள். இங்கு  குறையொன்றும் இல்லை பாலன்” என்று கைகூப்பி விடை தந்தார்.

தமிழ்ப்பள்ளியைப் பிறமொழிப் பள்ளியாய் மாற்றிவிடலாம் என ஒரு முறை சமுதாயத்தில் முரணான கருத்து முன்வைக்கப்பட்டபோது கவிஞர்கள் பொங்கியெழுந்து கவிபாடினார்கள். அப்பொழுது வீரமானும் ‘தமிழுக்கோர் அம்மானை’ எனும் தலைப்பில் எழுச்சிமிகு கவிதையைப் பாடினார். காலத்தின் பதிவாக அந்தக் கவிதை என்றும் நிலைத்திருக்கும். அதில் ஒரு கண்ணி:

“கல்விபெற என்னவழி கற்றோரே சொல்லு”மென்றோம்

கொள்ளிகொண்டு வந்து கொடுக்கின்றார் அம்மானை!

கொள்ளிகொண்டு வந்து கொடுக்கின்ற மேதைகட்குச்

சொல்லிவைப்போம் இச்சூழ்ச்சி செல்லாதென் றம்மானை!

சூதாட்டக் காயோ சுவைத் தமிழும் அம்மானை!

ந.பச்சைபாலன்