கோலாலம்பூர் : மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 2) காலை 10.00 மணியளவில் தொடங்கியது.
பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா?
அப்படியே கொண்டுவரப்பட்டாலும் வெற்றியடைய முடியுமா?
வரவு செலவுத் திட்டம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு சமர்ப்பிக்கப்படுமா?
வரவு செலவுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது தோற்கடிக்கப்படுமா?
போன்ற கேள்விகளை மையப்படுத்தி இந்த நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மொத்தமுள்ள 64 தீர்மானங்களில் 27 தீர்மானங்கள், அதாவது சரிபாதி எண்ணிக்கையிலான தீர்மானங்கள் மொகிதின் யாசின் தலைமைத்துவம் குறித்ததாகும்.
25 தீர்மானங்கள் மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களாகும். வெவ்வேறு அரசியல் கட்சிகளால் இவை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
2 தீர்மானங்கள் மொகிதின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானங்களாகும்.
இவை அனைத்தும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை முன்மொழியப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு மக்களவைத் தலைவர் அசார் ஹருண் அனுமதிப்பாரா என்பது தெரியவில்லை.
அமானா கட்சி இதில் 11 நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும், முன்பு பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது சுயேச்சைகளாகச் செயல்படும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தீர்மானங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.
சபாவின் வாரிசான் கட்சியிலிருந்து 7 நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும், பிகேஆர், ஜசெக ஆகியவை தலா ஒரு தீர்மானத்தையும் சமர்ப்பித்திருக்கின்றன.
மொகிதின் அரசாங்கத்திற்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானங்களை அம்னோவும் பாஸ் கட்சியும் சமர்ப்பித்திருக்கின்றன.
இன்று தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரை 27 நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 6-ஆம் தேதி 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.