கோலாலம்பூர்: நாளை திங்கட்கிழமை, நவம்பர் 2-ஆம் தேதி பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 6-ஆம் தேதி நடப்பு தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
இந்நிலையில் பிரதமர் மொகிதின் யாசின், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி, பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் ஆகியோர் உள்ளிட்ட தேசியக் கூட்டணித் தலைவர்களின் சந்திப்பு கூட்டம் இங்குள்ள ஹில்டன் தங்கும் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) நண்பகல் தொடங்கி நடைபெற்றது.
இந்தச் சந்திப்புக் கூட்டத்திற்கு பிரதமர் 12.20 மணி அளவில் வந்தடைந்தார். அவருக்கு சில நிமிடங்கள் முன்னதாக தலைவரும் சாஹிட் ஹாமிடியும் ஹாஜி ஹாடி அவாங்கும் அங்கு வந்து சேர்ந்தனர்.
மேலும் மசீச தலைவர் வீ கா சியோங், மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பிபிஎஸ் கட்சியின் தலைவர் மேக்சிமஸ் ஓங்கிலி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து கொள்ளும் களமாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது
மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற இடங்களில், தற்போது நாடாளுமன்றத்தில் 221 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
சபா மாநிலத்திலுள்ள பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினர் லியூ வுய் கியோங் காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கான நாடாளுமன்ற இடம் காலியாக இருக்கிறது.
எனவே குறைந்தபட்சம் 111 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படும். இந்தத் திட்டம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தால் நாடாளுமன்ற பாரம்பரியப்படி, மொகிதின் யாசின் அரசாங்கம் பதவி விலக வேண்டி வரும்.
கொவிட்-19 பாதிப்புகள், நாட்டு நலன், மக்கள் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என மாமன்னர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்
மாமன்னரின் வேண்டுகோளை ஏற்று மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கம் எதிர்க்கட்சியினருடன் வரவு செலவு திட்டம் குறித்துக் கலந்தாலோசிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் புத்ரா ஜெயாவில் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.