வியன்னா: வியன்னாவில் திங்களன்று நடந்த பயங்கர தாக்குதலுடன் தொடர்புடைய சோதனைகளில் 14 பேரை ஆஸ்திரிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
“வியன்னா, லோவர் ஆஸ்திரியாவில் 18 சோதனைகள் நடந்துள்ளன, மேலும் 14 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று நெஹம்மர் கூறினார்.
மத்திய வியன்னாவில் தாக்குதல்காரர், குஜ்திம் பெஜ்ஜுலாய் என்ற 20 வயது இஸ்லாமிய ஆடவர் திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டதாக காவல் துறையினர் நம்புகின்றனர் என்று அமைச்சர் கூறினார்.
“இந்த நேரத்தில் இரண்டாவது தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை,” என்று நெஹம்மர் கூறினார்.
ஆஸ்திரிய மற்றும் மாசிடோனிய நாட்டைச் சேர்ந்த இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ள பெஜ்ஜுலாய், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியாவுக்குச் செல்ல முயன்றதற்காக பயங்கரவாதக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார்.