Home One Line P2 இந்திய இளைஞர்களுக்கு மீன் வளர்ப்புப் பயிற்சி வழங்க ஏ.கே ராமலிங்கம் ஏற்பாடு

இந்திய இளைஞர்களுக்கு மீன் வளர்ப்புப் பயிற்சி வழங்க ஏ.கே ராமலிங்கம் ஏற்பாடு

1456
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தியர்கள் மிகக் குறைவாக ஈடுபட்டிருக்கும் வணிகத் துறைகளில் ஒன்று மீன் வளர்ப்புத் துறை. நல்ல இலாபம் தரும் தொழில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் துறையில் அதிக அளவில் இந்திய இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரான ஏ.கே.இராமலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராகவும் இராமலிங்கம் பணியாற்றி வருகிறார்.

அண்மையில் மீன்வள மேம்பாட்டு வாரிய உறுப்பினராக இராமலிங்கம் நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு அதிக அளவில் மீன்வளத் துறையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் இராமலிங்கம் தெரிவித்தார்.

மலேசியாவைப் பொறுத்தவரை மீன் வளத்துறையில் அதிக அளவு வாய்ப்பு இருப்பதாக, இராமலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் சுமார் 400 இந்தியர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த இராமலிங்கம் தற்போது கடலோரப் பகுதிகளில் மீன்வளம் அதிகம் இல்லாத நிலையில், ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் தொழிலைத் தொடர்வதில் அவர்கள் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும்  தெரிவித்தார்.

எனவே அவர்களுக்கு உதவும் நோக்கில் ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆலோசனையின் பெயரில், இதற்கு ஒரு மாற்றுத் திட்டமாக மீன் வளர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக இராமலிங்கம் குறிப்பிட்டார்.

ஏற்றுமதிச் சந்தைகளில் அதிகம் பிரசித்திப்பெற்ற மீன்களை வளர்க்கும் பயிற்சியை, ஆர்வமுள்ள 2000 இந்திய இளைஞர்களுக்கு வழங்குவதோடு, மீன் வளர்ப்பதற்குத் தேவையான செலவுத் தொகையையும் அரசாங்கத்திடம் இருந்து ம.இ.கா பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இராமலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இத்தகைய பயிற்சிகளின் மூலம் இந்தியர்கள் இத்துறையில் அதிகம் ஈடுபடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் பயிற்சிப் பட்டறை எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ம.இ.கா, மலேசிய இளம் தொழில்முனைவர் மேம்பாட்டு இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும், மலேசிய மீன் வள மேம்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பிலும் இந்தப் பயிற்சித் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகக் கூறிய இராமலிங்கம், ஆர்வமுள்ள இளைஞர்கள் தம்மை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்!

தொடர்புக்கு: 019-2421666