Home One Line P1 வரவு செலவுத் திட்டம் : “பொருளாதார மீட்சி , புதிய வேலைவாய்ப்பு, கொவிட்-19 முக்கியத்துவம் தரப்பட...

வரவு செலவுத் திட்டம் : “பொருளாதார மீட்சி , புதிய வேலைவாய்ப்பு, கொவிட்-19 முக்கியத்துவம் தரப்பட வேண்டும்

679
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 2021-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார மீட்சி ,புதிய வேலைவாய்ப்பு மற்றும் கோவிட்-19 தொற்று நோயை மேலும் விவேகமாகக் கையாளுவது போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என அரிமா என்றழைக்கப்படும் மலேசிய இந்தியர் மறுமலர்ச்சி இயக்கத்தின் கூட்டரசுப் பிரதேசப் பிரிவு தலைவர் மணிவண்ணன் இரத்தினம் (படம்) அறைகூவல் விடுத்துள்ளார்.

வணிகருமான அவர், ஹார்வார்ட் வணிகப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினருமாவார். அவரது முழு அறிக்கை பின்வருமாறு:

தற்போது நம் நாட்டைச் சூழ்ந்துள்ள உயிர் கொல்லி நோயான கொரோனா கிருமி தொற்றைக் கட்டுபடுத்துவதும் பொதுச்சுகாதாரத்தை பாதுகாப்பதும் மத்திய அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்..நோய் பீடிப்பை செவ்வனே நிர்வகிப்பதும் நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுவதும் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் .

#TamilSchoolmychoice

இந்த கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக வேலைகளை இழந்து தங்களின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்த மக்களுக்கு மத்திய அரசு உதவுவதை இன்னமும் சில காலங்களுக்கு தொடரவேண்டும் .தனிநபர்களுக்கான வருமான ஆதரவு ,முறையான பாதுகாப்பு உபகரணங்கள், பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளை தயார்படுத்திக் கொடுக்கவேண்டும்.

தொழிலாளர்களுக்கு மறுபயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இதனால் பயிற்சி மற்றும் பயிற்சிக்கான வாய்ப்புக்களை பெற வழி கிடைக்க செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக் கட்டுப்பாட்டையும் (எஸ்ஓபி) பின்பற்றவேண்டும்.

பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையில்லா நெருக்கடிக்கு பதில் அளிக்கும் விதமாக நிதி கொள்கை நடவடிக்கைகள் வரும் 2021-ஆம் ஆண்டின் வரவு செலவு கணக்கு அறிக்கையில் இருந்தால் வரவேற்கத்தக்கது.

மலேசியர்களுக்கான அடிப்படை வேலை வாய்ப்புகளை திரும்பப் பெறுவதற்கு உதவ முன்னுரிமை அளிக்க வேண்டும். பண நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதோடு, ஆபத்தான வேலைவாய்ப்புகளில் மிக குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களையும் இந்த சூழலில் பாதிக்கப்பட கூடிய தொழிலாளர்களையும் குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் கொவிட்-19 தொற்று பெரிதாக பாதித்துள்ளது . ஆகவேதான் பொருளாதார மீட்புக்கான விவேகத் திட்டத்தை ஆண் பெண் இருபாலருக்கும் உள்ளடக்கிய சமத்துவம் குறையாத வண்ணம் நிலையானதாக இருக்க வேண்டும் .

இதன் பொருட்டு ஊழியர் சேமநிதி வாரிய வைப்புத் தொகை (ஈபிஎஃப்) கணக்கு 1-இல் இருந்து சேமிப்புத் தொகைகளைத் திரும்பப் பெறுவதை ஆதரிக்கிறோம்.

மாதாமாதம் அட்டவணையிட்டு பணியாளர்களின் வருங்கால வைப்புத்தொகையில் இருந்து உதவி தொகை பெறுவது மிகவும் சிறந்த ஒரு ஆலோசனை என்று அவர் விளக்கம் அளித்தார் . குறிப்பாக திடீர் வேலையிழப்பு ,வருமானம் இல்லாமல் துயரத்தில் தவிக்கும் மக்களுக்கும் சொந்த தொழில் மற்றும் சிறு வணிகம் செய்து நாள்தோறும் வருமானம் ஈட்டியவர்களுக்கு பேருதவியாக இருக்கும் இந்தத் திட்டம் .அவர்களின் அத்தியாவசியமான தேவைகளுக்கும் இன்றியமையாத உணவுப் பொருட்களை வாங்கவும் அதிகமாக பயன்படும்.

உதவி தேவைப்படும் போது பயன் படாத சேமிப்புத் தொகை பின்னாளில் நிரந்தரம் அற்ற வாழ்க்கையில் ஓய்வு ஊதியமாக கிடைக்க யாருக்கு லாபம் கிடைக்க போகிறது. ஒரு வேளை உணவு உண்பதற்குக்கூட பாதிக்கப்பட்ட மக்கள் அவதியுற்று வருகின்றனர் என்பதை இங்கு எத்தனை பேர் அறிவோம்? இன்னமும் பல குடும்பங்கள் பசி பட்டினியால் வாடிக் கொண்டுதான் இருக்கின்றனர் .

அதிகபட்சம் 10,000 ரிங்கிட் வரையிலும் குறைந்த பட்சம், சேமிப்பு இருப்பு தொகையில் இருந்து 10% விழுக்காடு அடிப்படையில் உதவித் தொகையை வழங்கலாம். நாம் சிந்தித்து பார்த்தோமேயானால் அத்தகைய சிறிய அளவு குறைந்தபட்ச உதவி தொகை பெறுவது பின்காலத்தில் ஓய்வு பெற்ற நிலையில் பெரிய அளவில் இழப்பாகவும் தாக்கமாகவும் இருக்காது.

உதாரணமாக பி40 வகை மற்றும் எம்40 வகை மக்களுக்காக மாதவங்கி கடன்களை காலம் தாழ்த்தி திரும்ப செலுத்துவதற்கு (மொரிதொரியம்) ஏதுவாக இருக்கும். முழுநேர மற்றும் பகுதி நேர பல்கலைக்கழக ,கல்லூரி மாணவர்களின் 2021-ஆம் ஆண்டுக்கான கல்விக் கடன்களுக்குத் தள்ளுபடி அல்லது விலக்கு அளிக்க வேண்டும் . பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மறு தொழில் திட்டம், பயிற்சி திட்டம், உதவித் தொகை மானிய திட்டம் ஆகியவற்றை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் வரை தொடர்ந்து நீடிக்க வேண்டும். புதிதாக வேலைகளை உருவாக்குவதற்கும் பணியமர்த்துவதற்ககும் அரசு வழி வகுக்க வேண்டும் .அரசு தொழில் முனைவோருக்கு அந்தந்த துறைகளில் சிறப்பாக செயல்பட சிறப்பு மானியம், உதவிகளும் அரசு நிறுவனங்கள் ஏற்படுத்தி தரவேண்டும் .

இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் ஆதரவாகவும் சுமை குறைவாகவும் இருக்கும் .இவ்வாறான சலுகைகளைப் பெறும் போது தொழில்முனைவர்களுக்கு அரசு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கி தரமுடியும். அது அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் அவர்களின் தொடர்முயற்சிக்கு வெற்றிகரமாகவும் அமையும்.

கூட்டாண்மை சமூக பொறுப்புகளுடனான அடிப்படையில் (சிஎஸ்ஆர்) பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண்டும். இதனால் அதிகமான மக்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் தரகர்களும் வேலை வாய்ப்பு திட்டங்களை குறிப்பாக பி40 வகை மக்களுக்காக வழங்க வேண்டும் .

எனவே, இந்த கோவிட்-19 தொற்று நோயால் பாதிப்படையக் கூடிய குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அரசாங்கம் முன்முயற்சிகளை ஆதரிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் மீட்சிகாணும். பல தனியார் துறை நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் நம் நாட்டில் முதலீடுகள் செய்ய முன்வருவார்கள்.அதன் அடிப்படையில் நாடு மீண்டும் பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்று பயனீட்டாளர்களை ஊக்குவித்து தன்னம்பிக்கையோடு செலவு செய்ய உதவும்.

மேற்கண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த அனைத்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தாம் நிதிஅமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திலும் மற்றும் இணைய முகப்பிலும் 2021-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு சமர்ப்பிப்புக்கு முன்னதாகவே பதிவேற்றம் செய்துள்ளதாகவும் மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.