கோலாலம்பூர்: எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதிய ஆதரவு இல்லாததால் மக்களவையில் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 26) எண்ணிக்கை வாக்களிப்பை வெற்றி பெறவில்லை. இது தொடர்பாகப் பேசிய டாக்டர் மகாதீர் முகமட், மக்கள் தங்களுக்கு கொடுத்த கடமையை எதிர்க்கட்சி தவறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் நடுவில் கவிழ்க்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு பின் கதவு அரசாங்கத்தால் மாற்றப்படலாம் என்பதை இது நிரூபிக்கிறது. தேர்தல்கள் அர்த்தமற்றவை. இதற்கிடையில், இலஞ்சத்தால் உருவான அரசை ஆதரிக்கும் செயலாக இது அமைந்துள்ளது,” என்று நேற்று 2021 வரவு செலவு திட்டத்தின் அங்கீகரிப்புக்குப் பின்னர் அவர் தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
வரவு செலவு திட்ட வாக்களிப்பு அழைக்கப்பட்டபோது, பொக்கோக் செனா நாடாளும்னற உறுப்பினர் எண்ணிக்கை வாக்களிப்பைத் தொடங்க முயன்றார். இதற்கு குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இருப்பினும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே, முக்கியமாக பெஜுவாங் மற்றும் அமானாவைச் சேர்ந்தவர்கள் ஆதரவாக எழுந்து நின்றனர்.
வரவு செலவு திட்டம் பிறகு, குரல் வாக்கெடுப்பின் வழியாக நிறைவேற்றப்பட்டது. மேலும், விவாதங்கள் அடுத்த வாரம் தொடங்கி குழு கட்டத்தில் நுழையும். இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.