கோலாலம்பூர்: நிறுவனங்களிடமிருந்து நெடுஞ்சாலைகளை கையகப்படுத்துவது தொடர்பான திட்டத்தை அமைச்சரவை விவாதித்து முடிவு செய்ய உள்ளது. இது கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கு வழி வகுக்கும் என்று பொதுப் பணி அமைச்சர் பாடில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கமும் நெடுஞ்சாலை நிறுவனக்களும், நெடுஞ்சாலை கட்டண விகிதங்களைக் குறைக்கக் கருதக்கூடிய பல்வேறு முயற்சிகள் மற்றும் வழிமுறைகளை கலந்து பேசி வருகின்றனர்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“கட்டண விகிதங்களைக் குறைக்கும் நோக்கத்திற்காக நிதி மறுசீரமைப்பு தொடர்பான வழிமுறைகளை முன்மொழியவும் சலுகைகள் வழங்குவதை பொதுப் பணி அமைச்சகம் அனுமதித்தது,” என்று பாடில்லா, கோபிந்த் சிங் தியோவிடம் கூறினார்.
“இந்த திட்டங்கள் ஒரு முழுமையான முடிவுக்கு வருவதற்கு பொதுப் பணி அமைச்சகம், நிதி அமைச்சகம், பொது- தனியார் கூட்டு பிரிவு (யூகாஸ்), பிரதமர் துறை மற்றும் தொடர்புடைய துறைகளுடன் விவாதிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விவகாரத்தை அமைச்சரவையில் பரிசீலிப்பதற்கும், ஒப்புதலுக்கும் கொண்டு வரவும் அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.