Home One Line P1 வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கத் தவறியதற்காக அந்தோனி லோக் மன்னிப்பு

வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கத் தவறியதற்காக அந்தோனி லோக் மன்னிப்பு

473
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் கொள்கை அடிப்படையில் 2021 வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கத் தவறியதற்காக, ஜசெக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர், அந்தோனி லோக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

வாக்கெடுப்பு எண்ணிக்கை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என பொக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபூஸ் ஓமார் கேட்டுக் கொண்டார். அவரது பரிந்துரைக்கு ஆதரவு வழங்க குறைந்த பட்சம் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

#TamilSchoolmychoice

எனினும் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாபூஸ் ஓமாரின் பரிந்துரைக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து அவரது பரிந்துரை நிராகரிக்கப்பட்டு, குரல்வழி வாக்கெடுப்பின் மூலம் வரவு செலவுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களை எண்ணிக்கை வாக்களிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்காததற்கு லோக் பொறுப்பேற்பதாகக் கூறினார். நேற்று, வரவு செலவு திட்டம் குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

“நாங்கள் முழு வரவு செலவுத் திட்டத்தையும் நிராகரிக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பள உதவித் தொகைகள், முன்னணி பணியாளர்களுக்கு நிதி உதவிகள், பண உதவி போன்றவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் இருந்தன. மக்கள், முதலாளிகளுக்கான ஊதிய மானியம் மற்றும் ‘மை30 பாஸ்’ திட்டம் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும். இருப்பினும், சிறப்பு விவகாரத் துறைக்கு (ஜாசா) 85 மில்லியன் ரிங்கிட் மற்றும் தமிழ், சீனப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில் குறைப்பை ஏற்க முடியாது. அந்தந்த அமைச்சகங்களில் குழு அளவிலான விவாதத்தின் போது நாங்கள் ஆதரிக்காத ஒதுக்கீடுகளை நிராகரிப்போம்,” என்று அந்தோனி தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொள்கை அளவில் 2021 வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் பல்வேறு கண்டனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் நம்பிக்கைக் கூட்டணி உள்ளாகியது.

இது குறித்து பேசிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், வரவு செலவுத் திட்டத்தை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்தத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க இன்னும் வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று அறிவித்தார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அமானா கட்சித் தலைவரும், கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் சாபு வரவு செலவுத் திட்டம் குறித்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததாகவும், தான் அவரை சமாதானப்படுத்தி வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வைத்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்சி வாரியாக வாக்களித்திருந்தால் அன்வாரின் உண்மையான நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

அதை தற்போது தவிர்ப்பதற்காகவே அன்வார் இறுதிக்கட்டத்தில் தனது வியூகத்தை மாற்றி வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் எனக் கருதப்படுகிறது.

இனி வரவு செலவு திட்டம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட இடமளித்து இருப்பதன் மூலம் அதில் மாற்றங்களை தொடர்ந்து செய்ய முடியும் என்று அன்வார் கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் என அடுத்த கட்டத்திற்கு வரவு செலவுத் திட்டம் நகர்கிறது. அப்போது மேலும் விரிவான விவாதங்கள் நடைபெறும் என்பதால் அந்தத் திட்டத்தை ஆதரிப்பதா அல்லது தோற்கடிப்பதா என்பது குறித்த முடிவை அப்போது எடுக்கலாம் என்றும் அன்வார் விளக்கியிருக்கிறார்.