கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது.
பல்வேறு தரப்பினரால் கோரப்பட்ட ஊழியர் சேமநிதி வாரியத்தின் கணக்கு 1- லிருந்து பணத்தை திரும்பப் பெறும் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கூடுதல் உதவிகளை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் அறிவித்ததை அடுத்து இன்று வரவு செலவு திட்டத்திற்கு கொள்கை அடிப்படையில் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பின்வழி பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி அவைத் தலைவர் அசார் அசிசான் வரவு செலவுத் திட்டம் அங்கீக்கிரக்கப்படுவதாக அறிவித்தார்.
வாக்கெடுப்பு எண்ணிக்கை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என பொக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஹ்பூஸ் ஓமார் கேட்டுக் கொண்டார். அவரது பரிந்துரைக்கு ஆதரவு வழங்க குறைந்த பட்சம் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.
எனினும் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாபூஸ் ஓமாரின் பரிந்துரைக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து அவரது பரிந்துரை நிராகரிக்கப்பட்டு, குரல்வழி வாக்கெடுப்பின் மூலம் வரவு செலவுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.