Home One Line P1 அன்வாரின் அடுத்த கட்ட வியூகம் என்ன?

அன்வாரின் அடுத்த கட்ட வியூகம் என்ன?

508
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொள்கை அளவில் 2021 வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் பல்வேறு கண்டனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

எனினும் வரவு செலவுத் திட்டத்தை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அந்தத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க இன்னும் வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று அவர் அறிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு ஒன்றை நேற்று நடத்திய அன்வார் இப்ராகிம் அதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

#TamilSchoolmychoice

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அமான கட்சித் தலைவரும், கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் சாபு வரவு செலவுத் திட்டம் குறித்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததாகவும், தான் அவரை சமாதானப்படுத்தி வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வைத்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்சி வாரியாக வாக்களித்திருந்தால் அன்வாரின் உண்மையான நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

அதை தற்போது தவிர்ப்பதற்காகவே அன்வார் இறுதிக்கட்டத்தில் தனது வியூகத்தை மாற்றி வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் எனக் கருதப்படுகிறது.

இனி வரவு செலவு திட்டம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட இடமளித்து இருப்பதன் மூலம் அதில் மாற்றங்களை தொடர்ந்து செய்ய முடியும் என்று அன்வார் கூறினார்.

இருந்தாலும் இறுதியில் அந்தத் திட்டம் எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அன்வார் எச்சரித்திருக்கிறார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் என அடுத்த கட்டத்திற்கு வரவு செலவுத் திட்டம் நகர்கிறது. அப்போது மேலும் விரிவான விவாதங்கள் நடைபெறும் என்பதால் அந்தத் திட்டத்தை ஆதரிப்பதா அல்லது தோற்கடிப்பதா என்பது குறித்த முடிவை அப்போது எடுக்கலாம் என்றும் அன்வார் விளக்கியிருக்கிறார்.

எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று விட்டேன் என்றும் அடுத்த ஆட்சி அமைக்க ஆதரவு எனக்கு இருக்கிறது என்றும் மொகிதின் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது என்றும் கூறிவந்த அன்வார் இப்போது தலைகீழ் மாற்றமாக வரவு செலவுத் திட்டத்திற்கு முதல்கட்ட ஆதரவை வழங்கியிருப்பது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

அன்வாரும், ஜசெகவும் எடுத்த முடிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் பொதுமக்கள் கடுமையான சாடல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.