Home One Line P1 பாக்ருல்ராசியின் உறுப்பினர் அந்தஸ்து, பதவிகள் இரத்து செய்யப்படுகின்றன!

பாக்ருல்ராசியின் உறுப்பினர் அந்தஸ்து, பதவிகள் இரத்து செய்யப்படுகின்றன!

517
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமட் பாக்ருல்ராசி முகமட் மொக்தார் பிகேஆரில் இணைய விண்ணப்பித்ததாக தகவல் கிடைத்ததை அமானா கட்சி உறுதிப்படுத்தியது.

அமானா தகவல் தொடர்பு இயக்குனர் காலிட் அப்துல் சமாட் கூறுகையில், இந்த முடிவோடு, முகமட் பாக்ருல்ராசி கட்சியின் உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாகக் கூறினார்.

“அவர் விண்ணப்பித்து பிகேஆரில் சேர்ந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. வேறொரு கட்சியில் சேருவதன் மூலம், அவர் உடனடியாக தனது உறுப்பினர், மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளையும் இழந்தார், ” என்று காலிட் இன்று கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, மேரு சட்டமன்ற உறுப்பினர் பிகேஆரில் சேர அமானாவை விட்டு வெளியேற முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இதுவரை பிகேஆர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

முன்னதாக, அமானா கட்சியிலிருந்து அந்தக் கட்சிதான் தன்னை விலக்கியது என முகமட் பாக்ருல்ராசி தெரிவித்திருந்தார். பிகேஆர் கட்சியின் பெட்டாலிங் ஜெயா தொகுதியில் முகமட் பாக்ருல்ராசி தன்னை இணைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமட் பாக்ருல்ராசி 2015-ஆம் ஆண்டில் அமானா கட்சியில் இணைந்தார். அதற்கு முன்பாக அவர் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் பொருளாளராக இருந்தார்.

2018 பொதுத் தேர்தலில் அமானா கட்சி சிலாங்கூரில் 9 சட்டமன்றத் தொகுதிகளை நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் கைப்பற்றியது.

இதற்கு முன்னர் ஆண்டின் தொடக்கத்தில் சிலாங்கூரின், சபாக் சட்டமன்ற உறுப்பினர் அகமட் முஸ்தாயின் ஓத்மானையும் அமானா கட்சி நீக்கியிருந்தது.

தற்போது நீக்கப்பட்டிருக்கும் முகமட் பாக்ருல்ராசி நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் இருக்கும் பிகேஆர் கட்சியிலேயே இணைந்திருப்பதால் சிலாங்கூர் சட்டமன்றத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

மேலும் ஏற்கனவே, நம்பிக்கைக் கூட்டணி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் கணிசமான பெரும்பான்மை பெற்று வலுவுடன் இருப்பதால் முகமட் பாக்ருல்ராசியின் கட்சி மாற்றம் பெரிதான மாற்றத்தை ஏற்படுத்தாது.