Home One Line P1 ஐ-சினார்: நிபந்தனைகளை தளர்த்துமாறு அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை

ஐ-சினார்: நிபந்தனைகளை தளர்த்துமாறு அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை

584
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஐ-சினார் மூலம் ஈபிஎப் கணக்கு 1-லிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்துமாறு அம்னோ இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டது.

அதன் தலைவர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து அவரது கட்சிக்கு பல புகார்கள் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதால், விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வேலை இழந்தவர்கள், ஊதியம் பெறாத விடுப்பு மற்றும் வருமான ஆதாரங்கள் இல்லாதவர்கள் என நேற்று ஈபிஎப் தெரிவித்திருந்தது.

இருப்பினும், வருமானம் பாதிக்கப்பட்ட பலர் இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை என்று அசிராப் கூறினார்.

“புகார் அளித்தவர்களில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஐ-சினார் விண்ணப்பத்தின் நிபந்தனைகளின் சுருக்கத்தைப் பார்க்கும்போது, பங்களிப்பாளரின் முதலாம் கணக்கைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகளை வைப்பதில் ஈபிஎப் மிகவும் கடுமையானதாக இருப்பதாகத் தெரிகிறது.

“பலர் வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் பணிநீக்கம் செய்யப்படுவது அல்லது சம்பளத்தை ஒத்திவைப்பது என்ற பிரிவில் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.

கொவிட் -19 தொற்றின் விளைவுகள் காரணமாக பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள செலவுகள் மற்றும் கடமைகளைத் தீர்ப்பதற்காக தங்கள் சேமிப்பைத் திரும்பப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

“அம்னோ இளைஞர் பிரிவு ஈபிஎப் விதிகளை தளர்த்துவதோடு, வருமானக் கட்டுப்பாடு காரணமாக தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, ஐ-சினார் குறித்த விவரங்கள், இன்று நவம்பர் 18- ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று ஈபிஎப் கூறியது.

இருப்பினும், திங்கட்கிழமை ஈபிஎப் அறிவிப்பின் அடிப்படையில், பங்களிப்பாளர்கள் இந்த டிசம்பரில் தொடங்கி பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் ஜனவரி முதல் பணத்தைப் பெறலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

ஈபிஎப் இந்த திட்டம் இரண்டு மில்லியன் பங்களிப்பாளர்களுக்கு பயனளிக்கும் என்று கூறியிருந்தது. சுமார் 14 பில்லியன் ரிங்கிட் இதன் மூலம் வெளியாகும் என்று அது மதிப்பிடப்பட்டுள்ளது.

90,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் கீழ்பட்ட நிதியை, கணக்கு 1- இல் வைத்திருக்கும் பங்களிப்பாளர்களுக்கு, 9,000 ரிங்கிட் வரை தொகையை அணுகலாம். ஆரம்பத்தில் 4,000 ரிங்கிட் வரை திரும்பப் பெறலாம்.

கணக்கு 1- இல் 90,000 ரிங்கிட் மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்பு உள்ள பங்களிப்பாளர்களுக்கு, திரும்பப் பெறக்கூடிய அதிகபட்ச தொகை 60,000 ரிங்கிட்டாகும். ஆரம்பத்தில் அவர்கள் 10,000 ரிங்கிட் வரை பெறலாம்.

“பொதுவாக, தகுதியான உறுப்பினர்கள் தங்கள் சேமிப்புத் தொகையில் 10 விழுக்காட்டை கணக்கு 1- லிருந்து அணுகலாம். இது குறைந்தபட்ச 100 ரிங்கிட் பாக்கி பணம் கணக்கில் இருப்பதை விதியாகக் கொண்டுள்ளது,” என்று ஈபிஎப் கூறியது.

திரும்பப் பெறுதல் ஆறு மாதங்கள் வரை அவ்வப்போது செய்யப்படும் என்று ஈபிஎப் தெரிவித்திருந்தது.

இருப்பினும், ஐ-லெஸ்தாரி திட்டத்தைப் போலன்றி, ஐ-சினார் விண்ணப்பதாரர்கள் எதிர்காலத்தில் பங்களிப்புகளின் மூலம் திரும்பப் பெறப்பட்ட பணத்தை செலுத்த வேண்டும்.